மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி பயணித்து தேவரின் சிலைக்கு இணைந்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தேவர் ஜெயந்தியையொட்டி இவர்கள் சந்திப்பு நடந்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட சொல்வதை செங்கோட்டையன் தவிர்த்தார்.
இந்த சூழலில் செப்டம்பர் மாதத்தில் திடீரென செங்கோட்டையன் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிக்க அதன்பின் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் ரோடு ஷோ சென்றதோடு, டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், செங்கோட்டையனின் கருத்துக்களுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சட்டசபை கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுகளை செங்கோட்டையன் பின்பற்றினார். இதனால் செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி பக்கம் சென்றதாக கூறப்பட்ட நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள செங்கோட்டையன் மதுரை வந்தார்.
இதன்பின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் நோக்கி பயணித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பசும்பொன் சென்று தேவரின் சிலைக்கு இணைந்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தேவர் ஜெயந்தியையொட்டி இவர்கள் சந்திப்பு நடந்திருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.