கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் பதிவு தபால் சேவையை செப்டம்பர் 1-ஆம் தேதியில் ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைக்க போவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் சார் தபால்.. என்ற குரல் இனி கேட்காது..இனி ஸ்பீடு போஸ்ட் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதால் தபால் பெட்டிகளுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது.
காக்கி உடை அணிந்து தோளில் பை போட்டு கொண்டு சைக்கிள் ‛பெல்’ அடித்து கொண்டு சார் தபால்.. சார் போஸ்ட். என்று தபால்காரர் வீட்டு முன்பு வந்து நிற்பார். இந்த வார்த்தைகளை 90’ஸ் காலக்கட்டம் மற்றும் அதற்கு முன்பாக பிறந்தவர்கள் கேட்டு இருப்பார்கள். மேலும் தபாலில் குறிப்பிட்டு இருக்கும் பெயரை சொல்லி நீங்கள் தானா? என்று விசாரித்துவிட்டு தபாலை கையில் தந்துவிட்டு செல்வார். இப்படி ஒரு தொலைபேசி, செல்போன்கள், இ-மெயில் முகவரி இல்லாத காலக்கட்டம் தகவல்களை பரிமாறி கொள்வதில் தபால்களும் தபால் பெட்டிகளும் தான் முக்கிய பங்காற்றியது.
ஒரு செய்தியை உறவினர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் கடிதம் எழுதி தபால் நிலையம் அல்லது தபால் பெட்டி மூலமாக அனுப்பி வைப்போம். இன்னும் சொல்லப்போனால் கடிதத்தை எப்படி தொடங்குவது என்ற நீண்ட யோசனைக்கு பிறகு அதோடு உள்ளத்தில் ஊற்றெடுக்கும் எண்ணங்களை பேனா மை எழுத்துகள் மூலமாக நம் நேசத்துக்கு சொந்தக்காரர்களுக்கு கொண்டு செல்லும் ஒரு மகத்தான அனுபவம். அது எழுதும் பழக்கத்தை அதிகரித்தது.
அன்புள்ள அம்மா.. அன்புள்ள அப்பா.. அன்புள்ள பெரியம்மா, அன்புள்ள பெரியம்மா.. அன்புள்ள காதலி.. அன்புள்ள மனைவி.. அன்புள்ள கணவன்.. அன்புள்ள மாமா.. அன்புள்ள அத்தை.. என்று கடிதத்தின் முதல் வரியே கடிதம் எழுதுபவள் நம் மீது வைத்திருக்கும் பிரியத்தை புரிந்து கொள்ள முடியும். கடிதத்தில் இருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம் மனநிலையை தெளிவாக எடுத்துரைக்கும். காதலன் – காதலிகளுக்கு எழுதும் ரகசிய கடிதங்களை தபால் பெட்டியில் போட்டுவிட்டு சம்பந்தப்பட்டவரின் கைக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று பதற்றத்துடன் காத்திருப்பது, பொங்கல் சமயங்களில் நமக்கு பிரியமானவர்களுக்கு வாழ்த்து கூறி வாழ்த்து கடிதங்களை தபால் பெட்டி வழியாக அனுப்பி வைத்துவிட்டு அவர்களின் கைகளுக்கு சேர்ந்து விட்டதா? என காத்திருப்பதும் உள்ளிட்டவற்றை இன்றைய செல்போன், இ-மெயில்கள் நமக்கு தருவது இல்லை. முந்தைய கடிதங்களை இன்று நினைத்தால் கூட பலருக்கும் தங்களின் பழைய நினைவுகள் கண்முன்னே வந்து நிற்கும்.
ஒருவர் எழுதும் கடிதங்களை படிக்கும்போது கிடைக்கும் சுவாரசியம், ஏக்கம், காத்திருப்பை சொல்ல சொல்லில் அடங்காது. இப்போதும் கூட நம்மில் சிலர் தங்களின் அன்புக்குரியவர்கள் எழுதிய கடிதத்தை அவர்களின் நினைவாக கையில் வைத்திருப்பர். இப்படி கடிதங்கள் ஒரு காலத்தில் நம் வாழ்வுடன் ஒன்றிப்போய் இருந்த நிலையில் என்று அனைவரின் கையிலும் செல்போன்கள் வரத்தொடங்கியது. இதனால் எந்த தகவலை வேண்டுமானாலும் யாருக்கும் உடனடியாக சொல்லிவிட முடிகிறது. அதுமட்டுமின்றி போட்டோ, வீடியோக்களை ஒரு நொடியில் செல்போனில் அனுப்பும் வசதி உள்ளது.
இதனால் தபால் நிலையங்களை நாடும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. கடித பரிமாற்றம் குறைந்தாலும் கூட நம் ஊர்களில் ஆங்காங்கே சிவப்பு நிற தபால் பெட்டிகள் இன்றும் கூட இருக்கத்தான் செய்கிறது. கிராமங்களில் தபால் பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட முக்கிய அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் தபால் பெட்டிகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. தினமும் ஏராளமான ரிஜிஸ்டர்ட் போஸ்ட்டுகள் தபால் பெட்டிகளில் நிரம்புகின்றன.
ஆனால் இது எல்லாம் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை மட்டும் தான். அதன்பிறகு தபால் பெட்டிகளுக்கு குட்பை சொல்ல விட வேண்டும். ஏனென்றால் தற்போது ரிஜிஸ்டர்ட் போஸ்ட் சேவை நிறுத்தப்பட உள்ளது. அதாவது நம் நாட்டில் தபால் நிலையங்களை பொறுத்தவரை பதிவு தபால் சேவைகள் (Registered Post Service) கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் நீதிமன்றம், வங்கி, அரசு துறை சார்ந்த கடிதங்கள் உள்ளிட்டவை பாதுகாப்பான முறையில் பதிவு தபால் மூலம் அனுப்பபப்பட்டு வருகின்றன,
இந்நிலையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முதல், பதிவு தபால் சேவை, விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுகிறது. தபால் சேவைகளை நெறிப்படுத்துதல், கண்காணிப்பை மேம்படுத்துதல், சேவைகளை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று இந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்படுவதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
அதாவது பதிவு தபால்களின் மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்த நிலையில் ஒரே முறையில் தபால்களை ஒன்றிணைக்க உள்ளதாக தபால் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2011-12ம் ஆண்டில் நம் நாட்டில் மொத்தம் 244 மில்லியன் பதிவு தபால்களை(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) நம் தபால் துறை கையாண்டது. அது கடந்த 2019-20ம் ஆண்டில் 184 மில்லியன் என்ற அளவில் குறைந்தது. அதாவது 25 சதவீதம் வரை சரிந்தது. வாட்ஸ்அப், இ-மெயில், ஆன்லைன் கொரியர் சேவைகள், இ -காமர்ஸ் பிளாட்பார்ம்கள் வந்ததால் பதிவு தபால்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அரசு துறை சார்ந்த கடிதங்கள் மட்டும் பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
தற்போதும் பல விஷயங்கள் டிஜிட்டல் முறையில் நடப்பதால் தொடர்ந்து பதிவு தபால் சேவைகள் சரிவை எதிர்கொள்வதால் தபால் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. பொதுவாக ஸ்பீட் போஸ்ட் மற்றும் பதிவு தபால் சேவைகளை ஒரே மாதிரியாக தான் தபால் துறை வழங்கி வருகிறது. ஆனால் இரண்டுக்கும் கட்டணம் தான் வித்தியாசம். பதிவு தபால் அனுப்பும்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 முதல் ரூ.30 ஆக உள்ளது. ஆனால் ஸ்பீட் போஸ்ட்டின் அடிப்படை கட்டணம் ரூ.41 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பதிவு தபால்களை கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுதவிர சட்டத்துறை, அரசு துறைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பதிவு தபால் சேவை நிறுத்தத்தால் பாதிக்கப்பட உள்ளன. இருப்பினும் பதிவு தபால், ஸ்பீட் போஸ்ட் உடன் ஒருங்கிணைப்பதன் கட்டண செலவு அதிகரித்தாலும் கூட சில முக்கிய பயன்களும் உள்ளன. அதன்படி விரைவாக சம்பந்தப்பட்ட நபரை சென்றடையும். நாம் அனுப்பும் கடிதம் எங்கு உள்ளது என்பதை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.