எங்கள் பாரம்பரியத்தை பெருமையுடன் நாங்கள் பின்பற்றுகிறோம். இதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஒட்டுமொத்த ட்ரோல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளனர். ஒரு கண்டம் போல நம் நாடு பல வகையான கலாச்சாரங்களும் , பண்பாடுகளும் மற்றும் இயற்கைச் சூழலியலும் கொண்ட பரந்த நிலப்பரப்பு கொண்டது என்பதால் நம் நாட்டை ஒரு துணைக்கண்டம் என்று அழைக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரே பெண்ணை அண்ணன் தம்பி இருவரும் திருமணம் செய்து கொண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளானது.
அதுமட்டும் இன்றி கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானது. தங்களது மூதாதையர்களின் சொத்துகள் பிரிந்து போய் விடக்கூடாது என்பதற்காகவும், கணவனை இழந்த நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்பதற்காக இதுபோல ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யும் பழக்கம் இந்த ஹட்டி இன மக்கள் இடையே இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்த போதிலும் தற்போது இந்த பழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டாலும் முற்றிலுமாக குறையவில்லை. என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் ஷில்லாய் கிராமத்தில் ஹட்டி இனத்தைச் சேர்ந்த பிரதீப் நெகி, கபில் நெகி ஆகிய இரு சகோதரர்களும் சேர்ந்து குன்ஹட் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா சவுகான் என்பவரை பொதுவெளியில் திருமணம் செய்து கொண்டது பலருக்கும் வியப்பை கொடுத்தது. வெகு விமர்சையாக நடைபெற்ற திருமணம் குறித்த பதிவுகளை சமூக ஊடகங்களில் சகோதரர்கள் பதிவிட்ட நிலையில், பலரும் இதற்கு சட்டத்தில் அனுமதி உள்ளதா? எப்படி ஒரே பெண்ணை இருவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று காரசாரமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் தங்கள் மீதான ட்ரோல்களுக்கு விளக்கம் அளித்துள்ள சகோதரர்கள், “சிலர் எங்களை சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இத்தகைய திருமணங்கள் பல நூற்றாண்டுகளாக சம்மதத்துடன் நடைபெறும் ஒரு பாரம்பரியம். இப்போது எங்கள் குடும்பமும், உறவினர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.எங்கள் பாரம்பரியத்தை பெருமையுடன் நாங்கள் பின்பற்றுகிறோம். இதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை” என தெரிவித்தனர்.

மேலும் மணப்பெண் சுனிதா சவுகான் இதுபற்றி பேசுகையில், “என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எனது தனிப்பட்ட முடிவு இது. பாரம்பரிய வழக்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். முழு விருப்பத்துடன் தான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன்”எனக் கூறி ஒட்டுமொத்த ட்ரோல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளனர்.