விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மசூதிக்குள் விநாயகர் சிலையை வைத்து இஸ்லாமியர்கள் வழிபட்டு மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் நடத்தினர். மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அவற்றை 10 நாட்கள் பூஜைக்கு பிறகு ஆனந்த சதுர்த்தி அன்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம் ஆகும்.
மத கொண்டாட்டங்களின்போது மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆனால் அதே மகாராஷ்டிராவில் மத நல்லிணக்கத்துக்கு உச்சக்கட்ட எடுத்துக்காட்டாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஒரு கிராமத்தில் மசூதிக்குள் சிலை வைத்து வழிப்பாடு நடத்தப்படுகிறது. அதாவது சாங்கிலி மாவட்டம் கோட்கிண்டி கிராமம் ஜுஞ்சர் சவுக் பகுதியில் உள்ள மசூதிக்குள் விநாயகரின் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.

அங்கு சுமார் 15 ஆயிரம் மக்கள் தொகை இருக்கிறது. இந்த கிராமத்தில் சுமார் 100 முஸ்லிம் குடும்பங்கள் உள்ன. அங்கு மசூதிக்குள் விநாயகர் சென்ற நிகழ்வு சுவாரசியமானதாகும். 1980-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது அந்த கிராமத்தில் இந்துக்கள் திறந்த வெளியில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். அப்போது பெய்த அடை மழையால் விநாயகர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அருகில் உள்ள தங்களது மசூதிக்குள் விநாயகர் சிலையை பாதுகாப்பாக வைத்து வழிபட அனுமதித்து உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை சுமார் 45 ஆண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக மசூதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள்.
10 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு ஆனந்த சதுர்த்தியன்று அந்த கிராமத்தில் இருதரப்பு மக்களும் ஆட்டம், பாட்டத்துடன் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளூர் நீர்நிலையில் கரைக்கிறார்கள். இப்படியாக அங்கு 45 ஆண்டுகளாக நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த கிராமத்தை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறது.