இந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலில் ஷு அணிந்து பார்வையிட்டதை கண்டிக்கிறோம். அமைச்சரின் செயல் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தனது செயலுக்காக அமைச்சர் ரமேஷ் பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும் என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவில் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதா என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பல்வேறு கோவில்களிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை கடந்த சனிக்கிழமை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர பகுதியில், அமைச்சர் ரமேஷ் காலில் ஷூ அணிந்தபடி சென்று ஆய்வு செய்தார். கோவில் வளாகத்திற்குள் ஷூ அணிந்தபடி அமைச்சர் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக பக்தர்கள் கூறும் போது, “பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கம் போற்றப்படுகிறது. புண்ணிய ஸ்தலமான ஸ்ரீரங்கம் கோவிலில் ஷூ’ அணிந்தபடி அமைச்சர் ரமேஷ், கோபுர பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து இருப்பது அதிர்ச்சியை தருகிறது. இது குறித்து ராம ரவிக்குமார் பேசுகையில் , “இந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலில் ஷு அணிந்து பார்வையிட்டதை கண்டிக்கிறோம்.

அமைச்சரின் செயல் துளியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தனது செயலுக்காக அமைச்சர் ரமேஷ் பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். இனாம் நிலங்கள் தொடர்பன வழக்கு நிலுவையில் இருக்கும் போது நிலங்கள் கோவில்களின் பெயரில் இல்லை என்று அமைச்சரின் கருத்து ஏற்க முடியாத ஒன்றாகும். இதற்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.