சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே நடக்கும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். குடியரசு தின விழா கொண்டாட்டங்களை காண ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் பலரும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.
நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். இதன்படி இன்று டெல்லியில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதேபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர்கள் தேசியக் கொடி ஏற்றுகின்றனர்.

அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விழா மேடைக்கு இன்று காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். அதன்பின்னர் காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர் என் ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த ஆளுநர் ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக காவல்துறை தலைவர், சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல்துறை தலைவர்(சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். சரியாக 8 மணியளவில் தேசிய கீதமும் ஒலிக்க ஆளுநர் ஆர் என் ரவி தேசியக் கொடி ஏற்றினார். அதன் பின்னர் தேசிய கீதமும் ஒலிக்க ஒலிக்கப்பட்டது.
அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர்கள் தூவப்பட்டன. இதன் பிறகு ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்தினர். பின்னர் ஆளுநருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வந்தன. இதனை தொடர்ந்து அணி வகுப்பு மேடைக்கு வந்த மு.க. ஸ்டாலின் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு, சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை காண காலையிலேயே ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வருகை தந்தனர். பெண்கள், சிறுமிகள் என பலரும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்தனர்.