அசாம் காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு சம்மன் வழங்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய ஒரு கட்டுரை தொடர்பாக அசாம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பத்திரிகையாளர் மற்றும் ‘தி வயர்’ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால கைது பாதுகாப்பு வழங்கிய அதே நாளில், கவுகாத்தி காவல்துறை குற்றப் பிரிவு, சித்தார்த் வரதராஜனுக்கும், அந்த செய்தி நிறுவனத்தின் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 12-ந் தேதி, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மொரிகான் மாவட்ட காவல்துறையினரால் இந்திய நியாய சம்ஹிதாவின் (BNS) பிரிவு 152-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வரதராஜனுக்கு இடைக்கால கைது தடை வழங்கியது. அதே நாளில், கவுகாத்தியில் உள்ள அசாம் காவல்துறை குற்றப் பிரிவு, கவுகாத்தி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR தொடர்பாக, வரதராஜன் மற்றும் தாபருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பியது. ஆகஸ்ட் 22-ந் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் FIR நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தெரிவித்து இருக்கிறார். “பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் ஆகியோருக்கு அசாம் காவல்துறை சம்மன் அனுப்பியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்புடைய வழக்கில் பாதுகாப்பு வழங்கிய போதிலும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை, இதனால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது. சுதந்திரமான பத்திரிகைத் துறையை ஒடுக்குவதற்காக, ரத்து செய்யப்பட்ட தேசத்துரோக சட்டத்திற்குப் பதிலாக, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் (BNS) பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது” என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.