ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பான விவகாரம் குறித்த கேள்விக்கு, மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என டி.டி.வி. தினகரன் பதிலளித்தார். எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மக்களை சந்தித்துப் பேசினார்.தமிழ் நாடு கைவினைப் பொருட்கள்
அப்போது, அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருந்தபோது, ”இந்த அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆள் இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்ய முடியாது. தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள் கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது.

ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்து விட்டேன். எதிர்க்கட்சியின் கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியின் திட்டங்களை எல்லாம் நிறுத்தியதுதான் திமுக சாதனை, என எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார்.
இதனிடையே, மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பள்ளிக்கொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அணைக்கட்டு சென்ற போது அதிமுகவினரிடம் கூட்டம் முடிந்து விட்டதா என கேட்டேன். கூட்டம் முடிந்து விட்டது என கூறியதால் அவ்வழியாக சென்றேன். அங்கிருந்தவர்கள் என்னை தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தினர் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, 2026 சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. யாரிடமும் மண்டியிடாத இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். நாம் உண்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். உறுதியான, சரியான வழியில் நாம் செல்வோம். வரும் தேர்தலில் அமமுக முத்திரை பதிக்கும். 2026 பொது தேர்தலில் நாம் யார் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உறுதியாக செயல்படுவோம் என்றார்.
இதனைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பான கேள்விக்கு, மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.