சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்! என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து வடமேற்கு திசையில் 10 கிலோமீட்டர் தொலைவிலும், வாசுதேவநல்லூரில் இருந்து கிழக்கில் 5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள ஜமீன் நெற்கட்டும் செவ்வயல்.
அந்த ஜமீன் பரம்பரையில் 1710 ஆம் ஆண்டு பெத்த வீரன், வீரம்மா எனும் தம்பதியினருக்கு ஒண்டிவீரன் மகனாக பிறந்தார். ஒண்டிவீரன் சிறு வயதிலேயே வாள் வீசவும், கம்பு சுத்தவும், குதிரை சவாரி செய்யவும், பறையடிக்கவும், பாட்டுப் பாடவும், ஒயிலாடவும் மற்றும் தோல் வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார். இந்நிலையில், ஒண்டிவீரனது தந்தை இறந்ததால், ஜமீன் பொறுப்பை ஒண்டிவீரன் ஏற்றுக்கொண்டார். தமது நண்பரான பூலித்தேவனோடு சேர்ந்து ஆண்டு வந்தார். இந்த இருவரில் ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரின் வரலாற்றைத் தனித்துச் பேச முடியாது.
ஜமீன்முறை மாறிப் பாளையமாக மாற்றம் பெற்றபோது, சமூக அரசியல் சூழல் காரணமாக பாளையப் பொறுப்பை பூலித்தேவன் ஏற்றுக்கொண்டார். இருப்பினும், இருவரும் இணைந்தே பாளையத்தை ஆண்டு வந்தனர். ஒண்டிவீரன் படைத்தளபதியாக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டு, பகைவருக்கெதிரான போரை தலைமையேற்று நடத்தி வந்தார். கிழக்கு இந்திய கம்பெனியர் இந்தியாவில் வணிகம் செய்ய நுழைந்து, மெல்ல, மெல்ல அரசியல் சதுராட்டம் ஆடத்தொடங்கிய காலகட்டத்தில் ஆங்கிலேயர் ஆற்காடு நவாப்பிற்கு ராணுவ உதவி செய்து, அதன் மூலம் பாளையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை ஏற்றனர்.
1755 -ஆம் ஆண்டு பூலித்தேவனும் ஒண்டிவீரனும், ஆங்கிலேயருக்கு ஏன் வரி கொடுக்கவேண்டும் என்று எதிர்த்தனர். திருநெல்வேலியை கப்பமாக கட்ட மறுத்தனர். எனவேதான், நெற்கட்டும் செவ்வயல், “நெற்கட்டான் செவ்வயல்” என அழைக்கப்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வயல் பாயைத்தின் மீது போர் தொடுத்தனர். ஆற்காடு நவாபின் சகோதரர் மாபூஸ்கான் மற்றும் லார்ட் இன்னிங்ஸ் தலைமையிலான படையை நெற்கட்டான் செவ்வயல் பாளையத்தின் எல்லையிலேயே 1755 மே 22-ந் நாள் ஒண்டிவீரனும், பூலித்தேவனும் தோற்கடித்தனர்.

மீண்டும் அதே ஆண்டு மாபூஸ்கான் மற்றும் ஆங்கிலேயப் படைத்தளபதி அலெக்சாண்டர் ஹெரான் தலைமையில் திருநெல்வேலி நோக்கி பெரும்படை புறப்பட்டது. வழியில் மணப்பாறையில் லட்சுமண நாயக்கர் அடிபணிந்தார். மதுரையும் ராமநாதபுரமும்கூட பணிந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனாரான கெட்டி பொம்மு கர்னல் ஹெரானிடம் கப்பம் கட்டிப் பணிந்து போனார். தொடர்ந்து ஆங்கிலேயப் படை தென்மலையில் முகாமிட்டனர். ஆனால், அவர்களின் 2000 வீரர்களுடன் கூடிய பெரும்படையை ஒண்டிவீரன் மீண்டும் வென்று வெற்றிவாகை சூடினார். இதுவே ஆங்கிலேயருக்கு எதிரான நடந்த முதல் சுதந்திரப் போராகும்,
மீண்டும் 1756 மற்றும் 1757 ஆண்டுகளிலும் போர் தொடுத்த ஆங்கிலேயரை ஒண்டிவீரன் தோற்கடித்தவர் . 1767 மே 13 அன்று ஆங்கிலேயப் படைத் தளபதி டொனால்ட் காம்பெல் தலைமையில் நெற்கட்டான் செவ்வயலின் இராணுவ தளமாக இருந்த வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ் மறவர்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன் தலைமையில் மிகக் கடுமையாக போரிட்டனர். அப்போது, சங்கரன்கோவில் ஆவுடை நாச்சியார் கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன் மீண்டும் திரும்பவில்லை.
எனவே, ஒண்டிவீரன் மீண்டும் பாளையப் பொறுப்பை ஏற்று, பூலித்தேவனின் மூன்று பிள்ளைகளையும் நான்கு ஆண்டுகள் காத்துவந்தார். மீண்டும் களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிபுத்தூர், புதுக்கோட்டை போன்ற இடங்களில் ஆங்கிலேயரை எதிர்த்து இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இறுதியாக, 1771 ஆகஸ்ட் 20 ந் தேதி நடைபெற்ற தென்மலைப்போரில் மாவீரன் ஒண்டிவீரன் வீரமரணம் அடைந்தார் என்பது வரலாறு.
இந்த நிலையில்,மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும்செவலை நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்! என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.