நான்கு மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார் பணியில் சேர்ந்த நிலையில் லஞ்ச வழக்கில் உதவியாளருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில நில அளவையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய் துறை சேவைகளை பெற ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுகிறது. இந்நிலையில், எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை ஆண், பெண் என்று பேதமின்றி லஞ்சம் வாங்கி கைதியாகி வருவது வேதனை அளிக்கிறது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வாக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சதீஷ்குமார் என்பவர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்து இருக்கிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தேர்விஜயன் என்பவர் தனது தந்தையின் பெயரிலிருந்து தனது பெயருக்கு பட்டாவை மாற்றி தர வேண்டும் என விண்ணப்பம் செய்துவிட்டு கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரை சென்று பார்த்து இருக்கிறார். அப்போது தேர்விஜயனிடம் பட்டா மாறுதலுக்கு ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கறார் காட்டி இருக்கிறார்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என தேர்விஜயன் எவ்வளவோ சொல்லியும் பணத்தை கொடுத்தால் தான் பட்டா மாறுதல் என கண்டிப்புடன் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் பேசி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்விஜயன் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாறுக்கு பாடம் புகட்ட நினைத்து 6000 ரூபாய் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டதோடு, இது தொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் செய்து இருக்கிறார்.
இதன் பேரில் சேலம் லஞ்ச ஒழிப்புதுறை தேர்விஜயனிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இதனை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோரிடம் தேர்விஜயன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார் பணியில் சேர்ந்த நிலையில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.