பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து 7 -ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மாணவன் மோகித் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவன் மோகித்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், காயம் அடைந்த மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அருகேயுள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளி அமைத்துள்ளது. இந்த பள்ளியில் 500 ருக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் அரையாண்டு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் தேர்வுக்காக படித்து வருகிறார்கள்.
காலை மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடந்து வருகிறது. இதன்படி 7 ஆம் வகுப்பு மாணவன் மோகித் என்பவர் இன்று மதியம் தேர்வு எழுத தயாராக இருந்துள்ளார். இதற்காக மதிய உணவு நேரத்தில் பள்ளியின் வளாகத்தில் உள்ள கைப்பிடி சுவர் அருகே அமர்ந்து மோகித் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவன் மோகித் இடிபாடுகளுக்குள் சிக்கினார். உடனே இதுபற்றி அறிந்ததும் ஓடி வந்த ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மகன் உயிரிழந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சம்பவம் குறித்து அறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பெற்றோர், உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து 7 -ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.