“செங்கோட்டையனே.. அடையாளம் தந்த அதிமுகவே வேண்டாம் என்று போன பிறகு “எம்ஜிஆர், அம்மா” படம் மட்டும் எதற்கு? சூடு, சொரணை இருந்தால் எம்ஜிஆர், அம்மா படத்தை பயன்படுத்தாதே…” என்ற வாசகத்துடன் செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் ஜெயலலிதா வரையிலான அதிமுகவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 77 வயதான K A செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடைப்பதால் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய நிலையில் கடந்த மாதம் VK சசிகலா, TTV தினகரன், O ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததன் காரணமாக செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவம்பர் 26-ந் தேதி அவர் ராஜினாமா செய்தும் நவம்பர் 27-ந் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் தலைவர் விஜய்யின் முன்னிலையில் K A செங்கோட்டையன் இணைந்தார். அப்போது, தவெக தலைவர் விஜய், செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார். பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்.
இந்நிலையில், ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தவெக தலைவர் விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. தவெகவில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகளையும் தனது பெயருடன் செங்கோட்டையன் சேர்த்துப் போட்டுள்ளார்.
மேலும், செங்கோட்டையன் என்ற பெயரும், தவெக கொடி வண்ணத்தில் எழுதப்பட்டிள்ளது. மேலும் தனது காரிலும் கட்சிக் கொடியை செங்கோட்டையன் மாற்றி உள்ளார். எனினும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்துவதை அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக வாக்குகளை தவெகவிற்கு திசை திருப்ப அவர் இப்படிச் செய்வதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் “செங்கோட்டையனே.. அடையாளம் தந்த அதிமுகவே வேண்டாம் என்று போன பிறகு “எம்ஜிஆர், அம்மா” படம் மட்டும் எதற்கு? சூடு, சொரணை இருந்தால் எம்ஜிஆர், அம்மா படத்தை பயன்படுத்தாதே…” என்ற வாசகத்துடன் சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் மணலூர் மணிமாறன் அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.