பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி மேடையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கருத்து மோதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலையில் பாமகவின் இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனை ராமதாஸ் நியமனம் செய்தார். இதனை மேடையில் இருந்தே அன்புமணி கடுமையாக எதிர்த்தார்.
ந்த விவகாரம் ஏப்ரல் மாதத்தில் உச்சத்திற்கு சென்றது. அப்போது பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக முகுந்தன் கடிதம் எழுதினார். ஆனாலும் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. அதேபோல் செளமியா அன்புமணியின் அரசியல் வருகைக்கும் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சொந்த குடும்பத்தில் இருந்து அன்புமணிக்கு பின் யாரும் அரசியலுக்கு வரக் கூடாது என்பதே விருப்பம் என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, எம்எல்ஏ அருள், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி கலந்து கொண்டார். காந்திமதி முதலில் நிர்வாகிகளுடன் அமர வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென பாமக நிர்வாகிகள் அவரை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். அதனை ராமதாஸ் பார்த்து எதுவும் சொல்லவில்லை.
அனைவருக்கும் வணக்கம் கூறிய அவர், அமைதியாக மேடையில் அமர்ந்திருந்தார். இதன் மூலமாக காந்திமதியும் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே காந்திமதியின் மகன் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது நேரடியாக காந்திமதி பாமக செயற்குழுவில் பங்கேற்றிருப்பது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.