தாய்லாந்தில் நாட்டிலுள்ள பேங்காங்கில் பிரபலமான புத்தர் கோயில் ஒன்று உள்ளது. அங்குள்ளவர்கள் வழக்கப்படி, 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலத்தை சவப்பெட்டியில் வைத்து இந்த புத்தர் கோயிலுக்கு எடுத்து வந்துள்ளனர்.
அப்போது கோயில் நிர்வாகி, இறப்பு சான்றிதழை எப்படி பெறுவது? என்பது குறித்த உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு வழிமுறைகளை சொல்லி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் புத்தர் கோயிலின் அமைதியால் திடீரென கதவை தட்டுவது போல ஒரு சத்தம் கேட்டுள்ளது. யாரோ கதவை தட்டுவது என்று நினைத்து, வெளியில் சென்று வாசலில் பார்த்துள்ளனர். ஆனால், அங்கே யாருமே இல்லை. பிறகு மறுபடியும் நிர்வாகியும், உறவினர்களும் சான்றிதழ் தொடர்பாக பேச துவங்கினர்.
அப்போது மீண்டும் அதேபோல சத்தம் வரவும், சவப்பெட்டியில் இருந்துதான் சத்தம் வருகிறது என்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தனர்.. உடனே சவப்பெட்டியை திறந்து பார்த்தபோதுதான், அதிலிருந்த பெண் கதவை தட்டுகிறார் என்பது தெரியவந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்த உறவினர்கள், உடனடியாக அப்பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்று அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையும் தற்போது தரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெண்ணின் சகோதரர் மோங்கோல் சாகுல்கூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இரத்தச் சர்க்கரைக் குறைவு (Hypoglycaemia) என்ற பிரச்சனையால் என்னுடைய தங்கை சோந்திரட் (Chonthirat) பாதிக்கப்பட்டுள்ளார். இந்த குறைபாடு இருந்தால், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறைந்துவிடும். இதனால் மயக்கமும், தலைசுற்றலும் வந்துவிடும்.. கடந்த 2 வருடமாகவே இந்த கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.

சம்பவத்தன்று நிலைமை மோசமாகி, மயங்கி விழுந்துவிட்டார். 2 நாட்களாக பேச்சு மூச்சு இல்லாததால்தான், சோந்திரட் (Chonthirat) இறந்துவிட்டதாக நினைத்து இறுதி சடங்கு செய்ய நினைத்தோம். இதனால் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, என் தங்கையின் உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்தோம்.
ஆனால், முறையான இறப்புச் சான்றிதழ் இருந்தால்தான், உடல் தானத்தை ஏற்போம் என்று மருத்துவமனையில் சொல்லி விட்டார்கள். அதனால், நொந்தபுரி (Nonthaburi) என்ற இடத்திலுள்ள ஒரு புத்தர் கோவிலில் இலவசமாக இறுதிச்சடங்குகள் செய்வதைக் குறித்து கேள்விப்பட்டோம். உடனே சவப்பெட்டியில் என் தங்கையின் உடலை வைத்து அங்கு கொண்டு சென்றோம்.
ஆனால், அங்குள்ளவர்களும் இறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டால் இறுதிச்சடங்கு செய்யமுடியாது என்று சொல்லி விட்டனர். பிறகு கோவில் ஊழியர் ஒருவர், இறப்புச்சான்றிதழ் பெறுவது எப்படி என்று எங்களிடம் விவரித்து கொண்டு இருந்தார். அப்போதுதான் என் தங்கை சோந்திரட் (Chonthirat) கண்களை லேசாக திறந்தபடி, சவப்பெட்டியின் உள்பக்கத்தை தட்டி, காலால் அதை தள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தோம்.
உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தோம்.. அந்த கோவில் நிர்வாகிகள், என் தங்கையின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டது எங்களுக்கு நெகிழ்ச்சியை தந்துள்ளது. என் தங்கை சோந்திரட் (Chonthirat)-ன் உடலில் நல்ல முன்னேற்றம் தென்பட்டுள்ளது. என்னுடைய சகோதரி Chonthiratன் சடங்குகளை செய்வதற்காக, 500 கி.மீ. தூரத்திலுள்ள புத்தர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து, இப்போது என் தங்கையுடன் மகிழ்ச்சியாக வீட்டுக்கு கிளம்புகிறோம்” என மோங்கோல் சாகுல்கூ தெரிவித்துள்ளார்.