சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தில் ஒரு சில இடங்களில் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனை விளம்பரம் செய்து கொள்கிறார்கள். அதனை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி செல்லும் சென்னை புறநகர் ரயிலில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிராஜ் என்ற இளைஞரை, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் ரயிலில் வைத்து பட்டாக் கத்தியுடன் குத்துவது, வெட்டுவது போல் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். ஒரு கட்டத்தில் வடமாநில இளைஞரான சிராஜை சிறுவர்கள் கத்தியால் தாக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து ரயில் திருத்தணி வந்தபின், சிராஜை வலுக்கட்டாயமாக இறக்கிய சிறுவர்கள், மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு வைத்து சிராஜை கண்மூடித்தனமான அடித்து உதைத்து இருக்கின்றனர். தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சிராஜின் கை, கால், தலை, முகம் என்று பல்வேறு இடங்களிலும் வெட்டத் தொடங்கியுள்ளனர்.
இதனை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ தேசிய அளவில் கவனத்தை பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சியால் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டிற்கு, இந்த சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.

வடமாநில இளைஞர் தானே.. இவருக்கு எல்லாம் நியாயம் கேட்க யார் வருவார் என்று இளக்காரமாக அந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் கழித்தே சிராஜ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
கை,கால் தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சிராஜ் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறையினர் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதல் சிகிச்சை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிராஜ்.. உடல் முழுக்க காயங்களுடன் பேசக்கூட, திணறியபடி போராடிக் கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், சிவகங்கையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, திருத்தணி சம்பவத்திற்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. அவர்கள் செய்யும் சமூகவிரோத செயல்களை அவர்களே படமெடுத்து ரீல்ஸாக போட வேண்டும் என்ற ஆர்வம்.. இந்த கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதற்காகதான் தமிழக காவல்துறை தங்களின் பலத்தை காட்ட வேண்டும் என்று சொல்கிறேன். இப்படியான கலாச்சாரத்தை வளரவிடக் கூடாது. முதல்முறையாக இப்படியொரு சம்பவம் நடந்தது என்று பார்க்க முடியாது.
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இந்த மாதிரியான இளைஞர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது. இதனை வெறும் போதைப்பொருள் பிரச்சனையாக பார்க்கவில்லை. ஒரு சீரழிந்த கலாச்சாரமாகவே பார்க்கிறேன். ஒட்டுமொத்த தலைமுறையையும் நான் குறை சொல்ல மாட்டேன். ஒரு சில இடங்களில் தங்களை விளம்பரப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனை விளம்பரம் செய்து கொள்கிறார்கள். அதனை தடுக்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. அவர்களுக்கு போதுமான கவுன்சிலிங் மற்றும் மறுவாழ்வு மையம் மூலம் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.