வன்முறையை தூண்டும் ரீல்ஸ்கள், புகைப்படங்கள் தொடர்பாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தமிழக அரசு மூலம் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
இனம், ஜாதி, மதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வன்முறையைத் தூண்டும் கண்டெண்ட்கள் மக்களிடையே பிளவுகளை உருவாக்குவதோடு, சில சமயங்களில் நேரடியாக வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் கண்டெண்ட்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் போன்றவை, தகவல்களை விரைவாகப் பரப்பும் ஆற்றல் கொண்டவை. இதனால், வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகின்றன. இவை வன்முறை மற்றும் குற்றங்களை தூண்டும் ஆபத்தைக் கொண்டவையாக உள்ளதால், இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருண் பேசுகையில், “குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெருமைப்படுத்தும் வகையில் ரீல்ஸ்கள் வெளியாகின்றன. கத்தியை வைத்தும், சாதி ரீதியாகவும் ரீல்ஸ் பதிவிடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லையில் ஆணவக்கொலை சம்பவத்தில் சுர்ஜித்துக்கு ஆதரவாக ரீல்ஸ் பதிவிடுவது அதிர்ச்சியளிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் கட்டுப்பாடுகள் இல்லாததால் வன்முறையை தூண்டும் ரீல்ஸ்கள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன. இதனால் குற்றங்களை தூண்டும் விதமான ரீல்ஸ்களை தடுக்க, கட்டுப்பாடுகள் கோரி விரைவில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.