கண் போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா… மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா… மனிதன் போன பாதையை மறந்து போகலாமா… உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்…. உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்…. தலை வணங்காமல் நீ வாழலாம்… திருடாதே பாப்பா திருடாதே… வறுமை நிலைக்கு பயந்து விடாதே…. திறமை இருக்கு மறந்து விடாதே…. இது போன்ற பல்வேறு சமூக சிந்தனையில் இருந்த தமிழ் சினிமா இன்று மட்டை பண்ணு…, சாமான் பறக்கும்…, கேசு வாங்கு…, பொருளை போடு… என்று குற்றங்களை செய்வதை கூலாக வர்ணிக்கும் பாடல்கள் அதிகம் வருவது தமிழ் சினிமாவை சீரழிப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த கலாச்சாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி கொண்டுள்ளது.

இதன்விளைவு வெட்டுனா ஜெயிலு.. போன புழலு.. இறங்குனா பெயிலு என்று ரைமிங்காக பேசும் இளைஞர்கள் பலர் இப்போது டிரெண்டாகி வருகிறார்கள். இதனால் இன்றைய சமூகம் குற்றச்செயல்களில் ஈடுபடுவது.. தவறு என்பது தாண்டி அவர்களின் ஹீரோகளை போலவே சிலர் ஹீரோவாகவே மாறிவிட்டனர்.
முக்கியமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரத்திற்கு இடையில். வேகமாக டிரென்டாக சிலர் கத்தியை காட்டி ரீல்ஸ் போடுவது ரவுடி போல காட்டிக்கொள்வது, கிரைம் செய்வதை கூட பாடலாக பாடுவது இப்படி எல்லாம் செய்தால்.. நாமும் ஹீரோ போல.. நானும் பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. அதோடு ஜெயிலுக்கு சென்று வந்தால்.. “பெரிய கை” ஆகிவிடலாம் என்றும் சிலர் மனதில் எண்ணங்கள் விதைக்கப்பட்டுவிட்டன. இதன்விளைவை தான் நாம் இன்று திருத்தணி ரயில் சம்பவம் எடுத்து காட்டுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி செல்லும் சென்னை புறநகர் ரயிலில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிராஜ் என்ற இளைஞரை, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் ரயிலில் வைத்து பட்டாக் கத்தியுடன் குத்துவது, வெட்டுவது போல் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். ஒரு கட்டத்தில் வடமாநில இளைஞரான சிராஜை சிறுவர்கள் கத்தியால் தாக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து ரயில் திருத்தணி வந்தபின், சிராஜை வலுக்கட்டாயமாக இறக்கிய சிறுவர்கள், மறைவான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு வைத்து சிராஜை கண்மூடித்தனமான அடித்து உதைத்து இருக்கின்றனர். தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியால் சிராஜின் கை, கால், தலை, முகம் என்று பல்வேறு இடங்களிலும் வெட்டத் தொடங்கியுள்ளனர்.

இதனை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ தேசிய அளவில் கவனத்தை பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிடிபி வளர்ச்சியால் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாட்டிற்கு, இந்த சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.
வடமாநில இளைஞர் தானே.. இவருக்கு எல்லாம் நியாயம் கேட்க யார் வருவார் என்று இளக்காரமாக அந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த சிராஜ், கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் கழித்தே சிராஜ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கை,கால் தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சிராஜ் கீழே விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவல்துறையினர் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதல் சிகிச்சை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிராஜ்.. உடல் முழுக்க காயங்களுடன் பேசக்கூட, திணறியபடி போராடிக் கொண்டு இருக்கிறார்.