சும்மா வாங்க பேசுவோம், பேசி முடித்து விடுவோம் வாங்க என்று சொல்லி அந்த பெண்ணின் அம்மா, அப்பா, தம்பி எல்லாம் நைசாக பேசி வரச் சொல்லி மிளகாய் பொடிய தூவி எனது மகனை கொன்று விட்டனர் என கவின் செல்வ கணேஷ் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை உள்ள கேடிசிஆர் பகுதியில் வசித்து வரும் பட்டாலியன் காவல்துறையில் சிறப்பு ஆய்வாளர் சரவணக்குமார் – கிருஷ்ணவேணி தம்பதி இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். முன்னதாக சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதி திருநெல்வேலியில் இருந்த போது, அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.

அப்போதே ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின் செல்வ கணேஷ் என்பவருடன் நட்புடன் இருந்து வந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்புகள் முடிந்த பிறகும் இருவரும் பழகி வந்துள்ளனர். கவின் செல்வ கணேஷ் சென்னையில் வேலை பார்த்து வந்தபோதிலும், விடுமுறைக்குச் செல்லும்போது அந்த பெண்ணை சந்தித்துப் பேசி வந்து இருக்கிறார். இருப்பினும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த கவின் செல்வ கணேஷ், சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கவினை அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவின் செல்வ கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கினர். சுர்ஜித்தை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், திடீரென சுர்ஜித் காவல் நிலையத்தில் நிலையத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையே தனது மகன் கொல்லப்பட்டது குறித்து கவினின் தந்தை சந்திரசேகர் உருக்கமாக சில கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதில், “எனது மகன் படித்து முடித்து சென்னையில் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் இடையே 11-ஆம் வகுப்பு முதலே நட்பு இருந்தது. அந்த பெண் எனது மகனைச் சந்திக்க வரும்படி கூறும். அந்த பெண்ணின் அம்மா, அப்பா, தம்பி எல்லாம் நைசாக பேசி வரச் சொல்லி இருக்கிறார்கள். சும்மா பேசுவோம், பேசி முடித்து விடுவோம் வாங்க என்றே வரச் சொல்லியுள்ளனர். இதை நம்பியே எனது மகனும், மனைவியும் போய் உள்ளனர். எனது மனைவி உள்ளே சென்ற நிலையில், எனது மகன் வெளியே போன் பேசிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த பெண்ணின் தம்பி ஓரமாகக் கூட்டிச் சென்றுள்ளான். திடீரென கண்ணில் வத்தல் பொடியை வீசி, பிறகு வெட்டிவிட்டான். இதற்கு அவரின் அம்மா, அப்பா எல்லாம் உடந்தை தான். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சந்திரசேகர் தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பணிநீக்கம் செய்யும் வரை கவின் செல்வ கணேஷ் உடலை வாங்க மாட்டோம் எனச் சொல்லி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.