இலங்கை கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல் மீனவர்களை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் பெரும்பாலான மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடைப்பட்ட பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலையில் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டி படகில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை இன்று அதிகாலையில் அந்த பகுதிக்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் சுற்றி வளைத்தனர்.
மேலும் அந்த படகில் தாவிக்குதித்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலையுயர்ந்த மீன்களை அபகரித்துக்கொண்டனர். இது எங்கள் நாட்டு எல்லை என்று கூறிய அவர்கள், அந்த படகில் இருந்த உரிமையாளர் ஜஸ்டின், டெனிசன், மோபின், சைமன் மற்றும் சேகர் ஆகிய 5 மீனவர்களையும் எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் அவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அவர்கள் 5 பேரும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
இதற்கிடையே இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து டேவிட் என்பவருடைய நாட்டுப்படகில் 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களின் படகை இன்று அதிகாலையில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அதிலிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.
அதாவது ஒரே நாளில் 14 பேர் கைது செய்யப்பட்ட தகவல் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், எல்லை தாண்டியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தமிழக மீனவர்களை சிறைபிடிப்பு என்ற பெயரில் நடுக்கடலில் கடத்தி செல்லும் இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.