பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் மற்றும் ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவை. பனை நுங்கு குளிர்ச்சி தரக்கூடியது. பனங்கிழங்கு நார்ச்சத்து நிறைந்தது. பனை மரத்தின் பாளையில் இருந்து கிடைக்கும் சாறு பதநீர் எனப்படுகிறது. சிறிதளவு சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீர் மிகவும் சுவையானது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.

பனை மரத்தின் இலையைத்தான் ஓலை என்கிறோம். பனை ஓலை கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கயிறு தயாரிப்பு தொழிலில் பனை நார் முக்கிய பங்கு வகிக்கிறது. மண் அரிப்பை தடுப்பதில் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏரி மற்றும் குளக்கரைகளில் பனை மரம் வளர்க்கப்பட்டது. விவசாய நிலத்தின் கரைப்பகுதியில் அதிகளவு பனை மரங்கள் நடவு செய்யப்படும். பனை மரம் இருந்தால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.
ஆகையால், தமிழக அரசு பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் இன்று புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெறுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. பனை மரங்களை வெட்டி விற்கவும், செங்கல் குனைகளில் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னர் பனை மரங்களை வெட்ட இயலும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பனை மரங்களை வெட்ட அனுமதி பெற உழவர் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் போதும் அனுமதி கடிதம் கட்டாயம் காட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெட்டிய ஒரு மரத்திற்கு ஈடாக பத்து மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளின் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.