நீதிபதி சுதர்சன ரெட்டி ஏழை மக்கள், நலிவடைந்தோருக்கான பல்வேறு விவகாரங்களில் அவர்களின் நலன் சார்ந்து பல தீர்ப்பு வழங்கி இருக்கிறார். பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம் என கனிமொழி தெரிவித்தார்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், திமுகவுக்கு செக் வைக்கும் வகையிலேயே சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இதற்குப் பதிலடியாக திருச்சி சிவாவை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக அறிவிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அவர் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்ற மாஜி நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இரண்டாவது பெரிய அரசியலமைப்புப் பதவிக்கு அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளது. மேலும், அரசியல் பின்புலம் இல்லாத ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது. இதையடுத்து அப்போது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி அண்ணாதுரையின் பெயரும் கூட பரிசீலனை செய்யப்பட்டதாம். இருப்பினும், அப்போதும் திரிணாமுல் காங்கிரஸே இதை எதிர்த்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்தக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஒரு சித்தாந்தப் போட்டியாக அணுக வேண்டும் என்பதே திரிணாமுல் காங்கிரஸின் வாதமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் தான் தீவிர ஆலோசனைக்குப் பிறகு சுதர்சன் ரெட்டியை எதிர்க்கட்சியினர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து திமுகவுக்கு பாஜக செக் வைக்க முயன்றது. அதற்குத் தக்கப் பதிலடியாகவே “இந்தியா” கூட்டணி சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது.
சுதர்சன் ரெட்டியை ஒருங்கிணைந்த ஆந்திரா வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டணி அரசு நடக்கிறது. சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் பாஜக கூட்டணியில் இருந்தாலும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்ற முறையில் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கும். அதேபோல ஆந்திராவில் தனித்து இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆகிய கட்சிகளும் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, திரிணாமுல் கட்சி சொன்ன சில பாயிண்டுகளால் தமிழன் vs தமிழன் என்பது மாறி, ஆந்திராவில் இருந்து ஒருவரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக அறிவித்து பாஜகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும்.
பின்புறத்தில் இருந்து வந்த ஒருவரை தற்போது குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக பாஜக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும், அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் ? தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக என்ன செய்தார் ? என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம். நீதிபதி சுதர்சன ரெட்டி ஏழை மக்கள், நலிவடைந்தோருக்கான பல்வேறு விவகாரங்களில் அவர்களின் நலன் சார்ந்து பல தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் தற்போது அவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம் குடியரசு துணைத் தலைவர் தேர்வில் இறுதி பட்டியலில் யார் யார் இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக இறுதியாக ஒருமித்த கருத்தாக சுதர்சன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார், இதுவே இறுதியானது” என கனிமொழி தெரிவித்தார்.