KMCH மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாடியை எடுக்குமாறு கூறியதால், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமியர் மருத்துவமனையின் கொள்கை மத சுதந்திரத்தை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த MBBS, MD முடித்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர், சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று, கோயம்புத்தூரில் உள்ள KMCH மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் படிப்புக்காக சிறுநீரகவியல் (நெப்ராலஜி) துறையை தேர்வு செய்துள்ளார். கலந்தாய்வு நடைமுறைகளுக்குப் பிறகு ரூ.2 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் தொகையைச் செலுத்தி, கல்லூரியில் சேரச் சென்றுள்ளார்.
அப்போது அவரிடம், தாடியை ஷேவ் செய்யுமாறும், இது கல்லூரியின் விதிமுறையாக கடைபிடிக்கப்படுவதாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இஸ்லாமிய நடைமுறைகளின்படியே தான் தாடி வைத்திருப்பதாகவும், இப்படித்தான் இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்திருப்பதாகவும் அந்த மாணவர் கூறியுள்ளார்.
ஆனால், கட்டாயம் தாடியை அகற்ற வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் படிப்பைத் தொடர முடியாமல் ஜம்மு – காஷ்மீருக்கு திரும்பி உள்ளார். இது தொடர்பாக அங்கு ஜம்மு – காஷ்மீர் மாணவர் சங்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் மாணவர் சங்கத்தின் சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசிர் குவஹாமி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் தனிநபருக்கான மத சுதந்திரம் தமிழ்நாட்டில் பறிக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கும், கலாசார பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற ஒரு மாநிலத்தில் இப்படியான செயல் நடைபெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. மருத்துவ மாணவரின் மத சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் பறிக்கும்படியாக அமைந்த இந்த செயல் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரித்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.