பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய ரயில்களில் வரும் ஜூலை 1 முதல் புறநகர் ரயில்கள், மாதாந்திர பாஸ் மூலம் பயணிப்பவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், ஏசி வசதி இல்லாத மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா வீதமும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணத்தைப் பொறுத்தவரை முதல் 500 கி.மீ தொலைவுக்கு கட்டண உயர்வு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் கட்டணம் உயர்த்தப்படும் என்று வெளியான அறிவிப்பு பயணிகளுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது. ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம், நடுத்தர குடும்பங்களின் கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.
இதுகுறித்து, மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய ரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!” என மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டடிருந்தார்.
இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக சாடியிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை-வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார்.
ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை. தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை.
தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.