PACL நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் செலுத்திய பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப கேட்டு தொந்தரவு கொடுத்த காரணத்தினால் ஆட்சியர் அலுவலக முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் நிலத்தை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருவதாகவும், முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 12.50% வட்டி வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்த ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு நிர்மல்சிங் பாங்கு என்பவரால் கடந்த 1983-ஆம் ஆண்டில் பேர்ல்ஸ் கிரீன் ஃபாரஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், பின்னர் 1996-ஆம் ஆண்டு அதன் பெயரை பேர்ல் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிடெட் (PACL) என்றும், தலைமையிடத்தை டெல்லிக்கும் மாற்றிக் கொண்டது. . PACL நிறுவனத்தின் விளம்பரதை நம்பி, நாடு முழுவதும் 5.85 கோடி மக்கள், ரூ.49,100 கோடி முதலீடு செய்தனர்.
பின்னர் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6 கோடியாகவும், முதலீட்டின் அளவு ரூ.60,000 கோடியாகவும் அதிகரித்தது. பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் சட்டவிரோதமாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிஏசிஎல் நிறுவனம் செயல்பட தடை விதித்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ மற்றும் செபி அமைப்புக்கு ஆணையிட்ட உச்ச நீதிமன்றம், நிறுவனத்தின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தைத் திருப்பித் தர உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் குழு அமைத்தது.
ஆனால், அதன்பின் 8 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ரூ.10,000-க்கும் குறைவாக முதலீடு செய்த 12 லட்சம் பேருக்கு மட்டும் தான் ரூ.429.13 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தை மீட்டுத் தருவதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
PACL நிறுவனம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த நிறுவனத்திற்கு சொத்துகள் உள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் மொத்தம் 1.83 லட்சம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்திருக்கிறது. அவற்றை விற்பனை செய்தால், அந்தப் பணத்தைக் கொண்டு, முதலீட்டாளர்களின் பணத்தை முழுமையாக திருப்பித் தர முடியும். அதற்கான முயற்சியில் லோதா குழு ஈடுபட்டிருந்தாலும் கூட, பல இடங்களில் PACL நிறுவனத்தில் சொத்துகள் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் PACL நிறுவனத்திற்கு சொந்தமாக மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தேனி, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 8198 சொத்துகள் உள்ளன. அவற்றில் 5300 ஏக்கர் பரப்பளவிலான 237 சொத்துகள் சட்டவிரோதமான விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பல மாநிலங்களிலும் நடந்திருப்பது பின்னடைவு ஏற்பட்டிருப்பதற்கான காரணம் ஆகும்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் PACL நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி பேரில் சுமார் 1 கோடி பேர் ஆவர். PACL முதலீடு செய்து 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். முதலீட்டை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிரங்காட்டுப்பட்டி ஊராட்சி மங்களப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மனைவி பச்சையம்மாள். இவர் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த PACL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் முகவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து உடலில் தீப்பற்றிய நிலையில் பெண் ஒருவர் ஓடி வந்தார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
இதனையடுத்து தீயில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் பச்சையம்மாள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பச்சையம்மாள் PACL நிதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றிய நிலையில் அவருக்கு கீழே 70 பேர் சப்-ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017-ஆண்டு வரை பொதுமக்களிடம் வசூலித்த பணம் 4 கோடி ரூபாய் வரை பச்சையம்மாள் PACL நிறுவனத்தில் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தலைமறைவாகினர்.
இந்நிலையில் பச்சையம்மாளிடம் பணம் கொடுத்த சிலர் கடந்த சில மாதங்களாக தாங்கள் கொடுத்த பணத்தை கேட்டு சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த பச்சையம்மாள் தனது வீட்டில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்து வருவதாக கூறி சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பச்சையம்மாள் விரக்தி அடைந்து தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாலேயே அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது கணவர் மலைச்சாமி நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த நத்தம் காவல் துறையினர் நத்தம் அருகே மங்களப்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி, சிரங்காட்டுபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ், உலுப்பகுடியை சேர்ந்த கண்ணன் மற்றும் வீரப்பன், சின்னையம்பட்டியைச் சேர்ந்த செல்லம் மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அய்யூரை சேர்ந்த தயாளன் ஆகிய 7 பேரை கைது செய்து நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.