கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்..!

கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுப்பணித்துறை, உள்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலை துறை, சமூக நலத்துறை, பள்ளிகல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை என எந்த அரசு துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினால் சிறை தண்டனை உறுதி.

அதேநேரம் பொதுமக்கள் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது அவர்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியவந்தால், அந்த ஊழியர் மீது பணியிடை நீக்க நடவடிக்கையை உயர் அதிகாரிகளால் எடுக்க முடியும். அதேபோல் பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பு உள்ளது. காவலர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். காவலர்கள் லஞ்சம் வாங்கியது தெரியவந்தால், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய முடியும்.

குறைந்தபட்ச தண்டனையாக ஆயுத படைக்கும் மாற்ற முடியும்… இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய முடியும். அந்த வகையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்கள் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் கன்னிவாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கன்னிவாக்கம் பகுதியில் கால் டாக்சியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டிரைவரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் விசாரித்த போது அவர் மது குடித்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து 2 காவலர்களும், உன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.1,500 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கால் டாக்சி டிரைவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினாராம்.. ஆனால் 2 காவலர்கள் டிரைவரிடம் ‘கூகுள் பே’ வில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர் ரூ.2 ஆயிரம் இருக்கும் என்று கூறினாராம். அந்த 2 காவலர்களும் உடனடியாக நாங்கள் சொல்லும் ‘கூகுள் பே’ எண்ணுக்கு ரூ.1,500 அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவலர்கள் கூறிய எண்ணுக்கு ரூ.1,500-ஐ ‘கூகுள் பே’ மூலம் அனுப்பி இருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து 2 காவலர்களும் சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக கால் டாக்சி டிரைவர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவங்கள் பற்றி கூறினாராம். இந்த விவரம் தாம்பரம் மாநகர ஆணையர் கமிஷனர் அபின் தினேஷ் மோதக்கின் கவனத்திற்கு வந்தது. அவர் சம்பந்தப்பட்ட 2 காவலர்களை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கால் டாக்சி டிரைவரிடம் இருந்து மற்றொரு நபரின் ‘கூகுள் பே’ எண் மூலம் 2 காவலர்களும் ரூ.1,500 லஞ்சமாக பெற்றது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து ‘கூகுள் பே’ மூலம் ரூ.1,500 பெற்ற செந்தில், தர்மன் ஆகிய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் அதிரடியாக உத்தரவிட்டார்.

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை..!

இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா தங்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் உதகமண்டலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருடைய தந்தை ஆலுகுட்டி இயற்கை மரணம் அடைந்தார். இதனால் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு செலவு உதவித்தொகை வாங்குவதற்காக, குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில், நாராயணன் விண்ணப்பம் கொடுத்தார் .

இந்த மனுவுக்கு தீர்வு சொல்லாமல் பல நாட்களாக இழுத்தடிக்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை நாராயணன் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. முடிவில் அப்போது அங்கு வட்டாட்சியராக பணியாற்றிய கனகம், தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி ஆகியோர், பணம் கொடுத்தால் தான் பணி விரைவில் முடிக்கப்படும் என்று கூறி உள்ளனர்.ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பாத நாராயணன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் கடந்த 01-11-2010-ஆம் தேதி ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை வட்டாட்சியர் கனகத்துக்கும் ரூ.500 பணத்தை சாஸ்திரி ஆகியோருக்கும் நாராயணன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இதன்பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி, வட்டாட்சியர் கனகம் மற்றும் தற்காலிக இளநிலை உதவியாளர் சாஸ்திரி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்..!

சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ஆண்டிச்சிநகரை சேர்ந்த ஷாஜூ, தொழிலதிபரான இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க மாநகராட்சியின் 5-வது வார்டு வரி வசூலிப்பாளர் ராஜாவை அணுகியுள்ளார். அப்போது, வரி வசூலிப்பாளர் ராஜா சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் ஷாஜூயிடம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷாஜூ, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். ஒழிப்புத்துறையில் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை ஷாஜூயிடம் கொடுத்து , அவரி வசூலிப்பாளர் ராஜாவிடம் கொடுக்கும்படி அறியுவுறுத்தி உள்ளனர். ஒழிப்புத்துறையில் அறிவுரைப்படி அஸ்தம்பட்டி வார்டு அலுவலகத்திற்கு சென்று வரி வசூலிப்பாளர் ராஜாவிடம் நேற்று வழங்கினார்.

அங்கு, சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, ராஜாவை மடக்கிப்பிடித்தனர். மேலும், வெளியில் நிறுத்தியிருந்த ராஜாவின் இருசக்கர வாகனத்தில் பைக்கில் ஒழிப்புத்துறை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் வரி வசூலிப்பாளர் ராஜாவை கைது செய்தனர்.

ரூ.5,000 லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜோஸ்பின் மேரி ரூ.5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். புதிய வீடு கட்ட அனுமதி தருவதற்கு காளீஸ்வரன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது ஜோஸ்பின் மேரி சிக்கினார். லஞ்சம் பெற உடந்தையாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அருள்ராஜ் மற்றும் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.

அவள புடிச்சு உள்ள போடுங்க..! சேலைகளுக்குள் மறைத்து வைப்பு தினமும் லஞ்சப் பணத்தோடு வருகிறாள்..!

பூஜைஅறை, செருப்பு ஸ்டாண்ட், சேலைகளுக்குள் மறைத்து வைப்பு தினமும் லஞ்சப் பணத்தோடு வரும் மனைவி கணவர் வெளியிட்ட வீடியோ வைரல்..!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மணிகொண்டா நகராட்சியில் டி.இ.இ. ஆக பணிபுரிபவர் ஜோதி ஸ்ரீபத் தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் மனைவி ஜோதி லஞ்சம் வாங்குவதாக, கணவர் ஸ்ரீபத் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில், எனது மனைவி ஜோதி ஒப்பந்ததாரர்களிடம் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சமாக பெற்று வருகிறார். எத்தனை முறை சொல்லியும் லஞ்சம் வாங்குவதை கைவிடவில்லை. மேலும் லஞ்சம் வாங்க வேண்டாம் என கூறியதால் இருவருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டது. நான் சண்டையிடும் போதெல்லாம் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்க அழுத்தம் கொடுப்பதாகவும், அதனை தாங்க முடியாமல் லஞ்சம் வாங்குவதாகவும் கூறினார்.

லஞ்சம் வாங்குவது குற்றம், பாவம் என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தாலும் மனைவி ஜோதி அதை பொருட்படுத்துவதில்லை. 7 ஆண்டுகளாக லஞ்சம் வாங்குவது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்காமல் ஒரு நாள் கூட மனைவி வீட்டுக்கு வந்ததில்லை. கமிஷன் வடிவில் லஞ்சம் வாங்கி, பணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து, எனக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து விடுகின்றார். மொத்தம் ரூ.80 லட்சத்தை மறைத்து வைத்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிய வந்ததால் 2 நாட்களுக்கு முன்பு ஜோதி ஐதாராபாத் மாநகராட்சிக்கு பணியிடம் மாற்றப்பட்டார் என ஸ்ரீபத் அந்த வீடியோவில்
தெரிவித்துள்ளார்.

வீட்டில் உள்ள பீரோ சுவரில், வார்ட்ரோப்களில் புடவைகளுக்கு இடையே, பேப்பர்களுக்கு இடையே, சாமி அறைக்குள், சுவாமி படங்களுக்குப் பின்னால், செருப்பு மற்றும் ஷூக்களை வைக்கும் ஸ்டாண்டில் கூட பணத்தை மனைவி மறைத்து வைத்திருப்பதை வீடியோ எடுத்து அவர் வெளியிட்டுள்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாவில் பெயர் திருத்தும் செய்ய ரூ.20,000 லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கைது..!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம், மங்கம்மாள் புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் 2002-ல் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியிடமிருந்து 94 செண்டு நிலத்தை கிரையம் பெற்றுள்ளார். ஆனால், நிலப் பட்டாவில் கிருஷ்ணசாமிக்குப் பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மோகன், லால்குடி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகத்தில், 2024 மார்ச் 5-ல், அதை சரி செய்ய விண்ணப்பம் அளித்தார். நடைமுறையின்படி, அவரது விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி பெயர் மாற்றத்திற்கான பரிந்துரையுடன் துணை தாசில்தார் ரவிக்குமாருக்கு அனுப்பினார்.

ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜூலை 2024 முதல் துணை தாசில்தார் ரவிக்குமாரை தொடர்ந்து பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி மோகன் மீண்டும் லால்குடி தாலுக்கா அலுவலகத்திற்குச் சென்று, பெயர் திருத்தக் கோரிக்கையை செயல்படுத்த துணை தாசில்தாரிடம் கோரிக்கை வைக்க பெயர் மாற்ற பரிந்துரை செய்ய ரவிக்குமார் ரூ.50,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னார் தொடர்ந்த பேச்சுவார்த்தைஇல் ரூ.20,000 குறைக்கப்பட்ட லஞ்சத்திற்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க ரவிக்குமார் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசனின் மகன் மோகன் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்தார். நேற்று மதியம் லஞ்ச ஒழிப்பு துறை அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 20 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் சம்பத்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புதுறை துணை தாசில்தார் ரவிக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

எனக்கு மட்டுமா ஆஃபீஸையும் பாத்துக்கணும்… 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர்..!

எனக்கு மட்டுமா ஆஃபீஸையும் பாத்துக்கணும்… 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர்..!

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் அதிரடி மாற்றம்..!

கேரளாவிற்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து எம்சாண்ட், ஜல்லி, குண்டுக்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி கொண்டு செல்லப்படும் கனிம வளங்கள் சில லாரிகள் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற லாரியை செங்கோட்டையில் 3 காவலர்கள் வழிமறித்து ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து காவலர்கள் அன்பரசன், சுப்பிரமணியன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகம் முன்பு நேற்று முன் தினம் இரவு திருமுருகன்பூண்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் குணசுதன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே காரில் சென்ற வாலிபர்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் போதையில் இருந்துள்ளனர்.

இதற்கு, அபராதம் விதித்தால் நீதிமன்றத்திற்கு சென்று கட்ட நேரிடும் என கூறி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். வாலிபர்கள் ரூ.5 ஆயிரம் தர முன்வந்தனர். பணம் இல்லாததால் காவலர் குணசுதனை காரில் அழைத்து சென்று அவிநாசியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் ரூ.7 ஆயிரம் எடுத்து கொடுத்துள்ளனர். மேலும், காரில் இருந்த பீர் பாட்டில்களையும் குணசுதன் பெற்றுள்ளார். விலை உயர்ந்த புளூடூத் ஹெட்செட்டையும் எடுத்து வைத்துள்ளார்.

இதை அறிந்து மாநகர காவல் கண்காணிப்பாளர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மருதப்ப பாண்டியன் மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் குணசுதன் ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

டிஜிட்டலுக்கு மாறிய லஞ்சம்..! சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கைக்கு பரிந்துரை. ..!

தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அடிக்கடி சோதனை நடத்தி கணக்கில்வராத பணம் பிடிப்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்துவது வழக்கம். விசாரணையில் அவர்கள் மீது தவறுகள் இல்லை என்றால் எந்த ஒரு பிரச்சனைனும் இல்லை. ஆனால் மாறாக கணக்கில் வராத பணம் லஞ்சம் வாங்கி சேர்த்தவை என்று தெரியவந்தால், அவர்கள் மீது கைது, பணியிடைநீக்கம், துறைரீதியான நடவடிக்கைகளும் அதிரடியாக பாயும்.

அந்த வகையில் கடந்த இரண்டு ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புதுறை, சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடை சாலை பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது, இங்கு சார் பதிவாளர்களாக ராமமூர்த்தி, சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் லஞ்ச ஒழிப்புதுறைக்கு அதிக அளவில் பறந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் காவல்துறையினர், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது நடந்த சோதனையின் போது, சார் பதிவாளர் சாந்தி மட்டும் இருந்தார். அவரிடமும், அலுவலகத்தில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நேற்று மதியம் வரை தொடர்ந்தது.

அப்போது நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் சார் பதிவாளர் சாந்தி டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ரூ,25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சம் பெற்றிருப்பதும், அதை குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு மாற்றி வாங்கியதையும் கண்டுபிடித்தனர். இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நவீன்குமார் என்பவர் முன்கூட்டியே லஞ்ச பணத்துடன் தப்பி ஓடியதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் பிரவீன்குமார், சார் பதிவாளரின் வாகன ஓட்டுநர் ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு சார் பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரிந்துரைத்தனர்.