வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர்(பொ) மாலை அணிந்து கொண்டு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்தை கார் சீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.

அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அண்ணாமலை நகரை சேர்ந்த அசோக்குமார் வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொ) பணியாற்றி வருகிறார். இவர் தன்னை நாடி வரும் விண்ணப்பதாரரிடம் பத்திரப்பதிவுக்காக லஞ்சம் வசூலிக்கிறார் என்ற ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றுள்ளது. உடனே அந்த புகார்களை அடிப்படையாக கொண்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை (டி.வி.ஏ.சி) அதிகாரிகள் குழு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) ராமச்சந்திரன் தலைமையில் அசோக்குமாரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தது.

கடந்த மாதம் 28-ந் தேதி, அசோக்குமார் தன்னுடைய காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென நரிக்குடி பகுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அவரை வழிமறித்து நிறுத்தி காரில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் சீட்டில், மற்ற பகுதிகளிலும் ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இவ்வளவு பெரிய தொகையை பார்த்ததுமே அதிர்ந்த அதிகாரிகள், அதற்கான விளக்கத்தை கேட்டனர்.
ஆனால், எந்தவிதமான சட்டப்பூர்வமான ஆவணங்களையோ, விளக்கங்களையோ சார்பதிவாளரால் வழங்க முடியவில்லை. பிறகுதான் அது பொதுமக்களிடம் பத்திரப்பதிவு பணிக்காகப் பெறப்பட்ட லஞ்சப் பணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சார்பதிவாளர் அசோக்குமாரை, உடனடியாக வீரசோழனில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
சார்பதிவாளர் மீதான மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவரது வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக ஆய்வு செய்யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அசோக்குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.