கிருஷ்ணகிரியில் வரதட்சணை பணத்தை மீட்டு கொடுக்க 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் சமூக நலத்துறை பெண் அலுவலர் மார்த்தாவை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்யப்பட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த காவாய்ப்பட்டியை சேர்ந்த வனஜா. இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு நீதி மன்றம் மூலம் விவகாரத்து பெற்றுள்ளார். இந்நிலையில், திருமணத்தின்போது கணவருக்கு கொடுத்த வரதட்சணையாக கொடுத்த பணம் மற்றும் நகைகளை திரும்ப கேட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் கணவருக்கு கொடுத்த வரதட்சணையை கணவரிடமிருந்து மீட்டுத்தரக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் வனஜா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்ப, குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு பெண் அலுவலர் மார்த்தா என்பவர் வனஜாவிடம் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வனஜா, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 3,000 ரூபாய் நோட்டுகளை வனஜாவிடம் கொடுத்து இதனை குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு பெண் அலுவலர் மார்த்தாவிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட வனஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து, வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் மார்த்தாவிடம், வனஜா கொடுத்துள்ளார். பின்னர், மார்த்தா பணத்தை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை, கையும் களவுமாக மார்த்தாவை பிடித்தனர். இதனால் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.