கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்தும் கர்ப்பமான தாய் மற்றும் சேய் உரிழப்பால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் இறந்து விட்டதாக குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர் அம்மன்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அண்ணாதுரை என்பவரின் மனைவி சங்கீதா. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார். ஆனாலும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு கடந்த 22-ந் தேதி அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் மற்றும் சேய் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், தாயின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதன்பின்னர் அறுவை சிகிச்சை மூலம் சங்கீதாவின் வயிற்றில் இருந்து 6 மாத குழந்தையை வெளியே எடுத்தார்கள். ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள், தொடர்ந்து சங்கீதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாம். இதனால் சங்கீதாவிற்கு மீண்டும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சை நிலையில் திடீரென சங்கீதா உயிரிழந்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சங்கீதாவின் உறவினர்கள் நேற்று அரசு மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் சங்கீதா இறந்து விட்டதாக குற்றம்சாட்டினர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உறவினர்கள் கூறும்போது, சங்கீதாவிற்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் எப்படி கர்ப்பம் தரித்தார்.? தற்போது கூட அறுவை சிகிச்சை முடிந்து தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் குற்றம் சாட்டினார்கள்.