ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் நில மோசடி புகாரில் சமரசம் செய்து, அவர்கள் இழந்த முன்பணத்தை மீட்டுத் தருவதற்காக ரூ. 5 லட்சம் லஞ்சம் பெற்றதாக, கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு முன்னாள் உதவி ஆணையர் மற்றும் இடைத்தரகர் மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான நாகராஜன் மற்றும் நூருல்லா ஆகியோர் நிலம் வாங்குவதற்காக வழங்கிய ரூ. 2.42 கோடி முன்பணத்தை விற்பனையாளர்கள் திருப்பித் தர மறுத்ததை அடுத்து, 2023-ஆம் ஆண்டு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை விசாரித்த அப்போதைய மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் உதவி ஆணையர் குணசேகரன், எதிர் மனுதாரரிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர 10 சதவீதத்தை லஞ்சமாகக் கேட்டதாக புகார் எழுந்தது.
இதற்காக பிரவீன் என்ற தனியார் நபரை இடைத்தரகராகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டும் எழுந்தது. முதற்கட்டமாக மீட்கப்பட்ட தொகையில் இருந்து தனக்காக ரூ. 5 லட்சமும், இடைத்தரகருக்கு கமிஷனாக ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இடைத்தரகர் மூலம் ரூ. 4.40 லட்சத்தை குணசேகரன் பெற்றுக்கொண்டதாகவும், இடைத்தரகர் தனது கமிஷன் தொகையை மனைவியின் வங்கி கணக்கிற்குப் பெற்றதாக விசாரணையில் உறுதி செய்தார்கள்
இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் குணசேகரன் மற்றும் பிரவீன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. உயர் காவல்துறை அதிகாரி ஒருவரே லஞ்ச வழக்கில் சிக்கிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.