தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கிய இந்திய வருவாய் பணி (IRS ) பெண் அதிகாரி பிரபா பண்டாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.1.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. உத்தர பிரதேசம், ஜான்சியில் GST அலுவலகம் செயல்படுகிறது. அங்கு துணை ஆணையராக (ஐஆர்எஸ் அதிகாரி) பிரபா பண்டாரி பணியாற்றி வந்தார்.
கடந்த 18-ந் தேதி அவரது தலைமையிலான GST அதிகாரிகள், ஜான்சி நகரில் செயல்படும் ஜெய் அம்பே பிளைவுட்ஸ், ஜெய் துர்கா ஹார்ட்வேர் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது இரு நிறுவனங்களிலும் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் லோகேஷ், ராஜு மங்தானி ஆகியோர் லஞ்சம் கொடுக்க முன் வந்தனர்.

இருவரும் ஜான்சி GST அலுவலக கண்காணிப்பாளர் அனில் குமாரை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது ரூ.1.5 கோடி லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டது. இதுதொடர்பான ரகசிய தகவல் CBI அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள் ஜான்சியில் முகாமிட்டு GST அலுவலக அதிகாரிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்தனர். கடந்த 30-ந் தேதி வழக்கறிஞர் நரேஷ் குப்தா என்பவர், GST கண்காணிப்பாளர் அனில் குமார், மற்றொரு மூத்த அதிகாரி அஜய் சர்மாவை சந்தித்து ரூ.70 லட்சம் லஞ்ச பணத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த CBI அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் CBI அதிகாரிகளின் உத்தரவின்பேரில் GST கண்காணிப்பாளர் அனில்குமார், துணை ஆணையர் பிரபா பண்டாரியிடம் மொபைல் போனில், “முதல்கட்டமாக ரூ.70 லட்சம் வந்துவிட்டது” என்று அனில்குமார் கூற, எதிர்முனையில் பேசிய பிரபா பண்டாரி, “வெரிகுட், அந்த பணத்தை தங்கமாக மாற்றி என்னிடம் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பிரபா பண்டாரி தங்கியிருந்த டெல்லியில் உள்ள சொகுசு வீட்டிற்கு விரைந்து சென்று CBI அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

அவரது வீட்டில் CBI அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி அவரிடமிருந்து ரூ.1.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி கட்டிகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல GST அதிகாரிகள் அனில் குமார், அஜய் சர்மா ஆகியோரும் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.