79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் இருப்புப் பாதை காவல் நிலையம் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 79-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். அதேபோல சென்னை ராஜாஜி சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் 5-வது முறையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கோயமுத்தூர் இருப்பு பாதை காவல் நிலையம், இருப்புப் பாதை காவல் படை, கோயம்புத்தூர் ரயில் குழந்தைகள் உதவி மையங்கள் மற்றும் பெண்கள் நிலை குறித்த ஆணையம் ( CSW) பௌண்டேஷன், CAMIA பௌண்டேஷன், PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெண்கள் ஜன்னல் ஓரத்தில் தலை வைத்து படுப்பதை தவிர்க்க வேண்டும். படுத்து துாங்கும் பெண் பயணிகள், தங்களின் நகைகளை வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ரயிலில் தனியாக பயணம் செய்யும்போது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் குளிர்பானங்களையோ, திண்பண்டங்களையோ வாங்க வேண்டாம். சந்தேகப்படும் படி நபர்கள் இருந்தால், 1512, 9962 – 500500 என்ற எண்ணிற்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது