எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி என்னை சந்திக்க தைரியம் வரும். அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ இல்லை.. ஆனால் துரோகத்தை ஏற்க முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் . அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார். மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறி வந்த எடப்பாடி, டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசி 6 மாதங்களுக்கு முன்பு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைதார்.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.
மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரும் விலகிவிட்டனர். அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சேருவதாக இதுவரை எந்த கட்சியும் அறிவிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்கும் அண்ணாமலையின் முயற்சி செய்தார். இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்த போதுதான் எங்களுடன் தொடர்பில் இருந்து பாஜக கூட்டணிக்குள் கொண்டு வந்தார். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய போது, அண்ணாமலையுடன் பேசினேன். நேரில் சந்தித்த போதும் அவசரப்பட வேண்டாம் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த மறுபரிசீலனைக்கு அவசியம் இல்லை. 2021 சட்டசபைத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணிக்கு வர அமமுக தயாராக இருந்ததாக பேசி வருகிறார்கள். எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி என்னை சந்திக்க தைரியம் வரும். அவருக்கு தயக்கம் இருக்கும். அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் வரை அமமுகவுடன் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை.
டெல்லியில் உள்ள சில நல்ல உள்ளங்கள், திமுகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டால் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறினார்கள். அவர்கள் சொல்லும் போதே எனக்கு நன்றாக தெரியும்.. இது நடக்காது என்று.. நான் மதிக்கும் சிலர் சொல்லும் போது, வாய்ப்பே இல்லை என்று கூறி இருக்கிறேன். ஏப்ரல் மாதத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த போது, சில நல்ல உள்ளங்கள் நாங்கள் விரும்புகிற மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்கள். அதற்கு வாய்ப்பில்லை என்று உணரும் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். எங்களுக்கு துரோகம் செய்து எடப்பாடி பழனிசாமியால் நேருக்கு நேர் சந்திக்க முடியும் என்று நம்பவில்லை.
ஒரு கட்டத்தில் என்னை டெல்லிக்கு அழைத்து என்னை சமாதானம் செய்ய முயற்சித்தார்கள். அதனை புரிந்து கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தேன். அண்ணாமலை வந்த போதும் கூட, இதனைதான் கூறினேன். அவரும் நானும் நல்ல நண்பர்கள். அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ இல்லை.. ஆனால் துரோகத்தை ஏற்க முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.