சிறுவன் கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறுவனை மீட்ட தனிப்படை காவல் துறையினர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவளத் தெருவில் வசித்து வரும் சாப்ஃட்வேர் இன்ஜினியர் வேணு. தனது நான்கு வயது மகன் முகேஷை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார். அப்போது, வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு மர்ம நபர்கள் திடீரென மிளகாய்ப் பொடியைத் தூவி, வேணுவின் கண் முன்னேயே நான்கு வயது குழந்தையை கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரில் கடத்திச் சென்றுள்ளனர்.
இதைக் கண்டு வேணு சப்தமிட்டு துரத்திச் சென்றபோதும் சொகுசு கார் நிற்காமல் அதிவேகமாக அங்கிருந்து சென்றுள்ளது. குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்துற்கு வேணு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் அனைத்து நிலையங்களுக்கும் குழந்தை கடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தனர். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் காவல்துறையினர் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், அந்த சிறுவன் மாதனூர் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே நின்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக தனிப்படை காவல் துறையினர் சிறுவனை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார், எதற்காக குழந்தையைக் கடத்தினர் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. வீட்டில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கிட்டத்தட்ட அங்கிருந்து 10 முதல் 15 கிலோமீட்டருக்கு அப்பால் தனித்து விடப்பட்டுள்ளார். இந்தக் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான குழந்தை கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை கண்டுப்பிடித்த தனிப்படை காவல் துறையினர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பாராட்டுகள் குவிந்து வருகிறது.