லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணையின் போது ஒரு பாட்டிலை உடைத்து, தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் பழநி பைபாஸ் ரோட்டில் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறார். இவரிடம் மனமகிழ் மன்றம் பிரச்னை இல்லாமல் தொடர்ந்து நடத்த தாலுகா உதவி ஆய்வாளர் கலையரசன் என்பவர் 10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன் பின்னர் பேரம் பேசி மாதம் ரூ.7 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மனமகிழ் மன்றத்தின் உரிமையாளர் சுகுமார் உதவி ஆய்வாளர் கலையரசனுக்கு பாடம் புகட்ட நினைத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரசாயனம் தடவிய ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுகுமாரிடம் கொடுத்து அனுப்ப பழனி பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் வைத்து உதவி ஆய்வாளர் கலையரசன் ₹7,000 பணத்தைப் பெற்றபோது, ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
பிடிபட்ட இடத்திலேயே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுடன் கலையரசன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் கலையரசனை விசாரணைக்காக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். லஞ்சம் வாங்கியதை உறுதி செய்வதற்காக ரசாயன கலவை தயார் செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தபோது தடயத்தை அழிக்கும் முயற்சித்த கலையரசன் ரசாயன கலவை தயார் செய்து வைத்திருந்த கண்ணாடி டம்ளரை அடித்து நொறுக்கினார். இதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் குத்தி அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகராஜன், கலையரசனின் கையில் இருந்த உடைந்த கண்ணாடி துண்டைப் பிடுங்க முயன்றார். இந்த மோதலில் கலையரசன் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகிய இருவருக்கும் கைகளில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த உதவி ஆய்வாளர் கலையரசன் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகிய இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கலையரசன் மீது லஞ்சம் வாங்கியது, தற்கொலை முயற்சி மற்றும் அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.