2026 தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே. நித்தியானந்தன் அவர்கள் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உடன்பிறப்புகள், திரளான பொதுமக்கள், ஆரவாரத்துடன் கோயம்புத்தூர் சாலையில் இருந்து, மேளதாளத்துடன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலர் ராமகிருஷ்ணசாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான மருத்துவர் மகேந்திரன், காங்கிரஸ் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், விசிக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மதிமுக நகர செயலாளர் குகன் மில் செந்தில் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கே. நித்தியானந்தன், பொள்ளாச்சி தொகுதிக்கு நீண்ட நாள் கோரிக்கையான பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவோம், பெண்கள் கல்வியில் முன்னேற வழிவகை ஏற்படுத்துவோம், தென்னை விவசாயிகளுக்கு உறுதுணையாய் நிற்போம், வாகனங்கள் நெரிசல் இல்லாத பொள்ளாச்சி நகரை உருவாக்குவோம், சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவோம். கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி இருந்தார். அடுத்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர்ந்து நடைபெறும் பொள்ளாச்சிக்கு அனைத்து விதமாகவும் உறுதுணையாய் நிற்பேன் என கே. நித்தியானந்தன் உறுதியளித்தார்.