விஜய்யின் கோமாளித்தனமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தூத்துக்குடியில் படுதோல்வி அடைய செய்வோம் என சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் பதிவுகளால் தவெக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட உள்ளன. இதனால் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக விஜய்யின் தவெக எந்த கட்சி உடனும் கூட்டணி அமையாத சூழலில், தவெக தனித்துப் போட்டியிடுகிறது. இந் நிலையில், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக தனது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை அறிவித்துள்ளார்.
தவெக தொடங்கியது முதலே தூத்துக்குடி தொகுதியில் களப்பணி ஆற்றி வந்த அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், தமிழ் மாநில காங்கிரஸின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலனின் உடன்பிறந்த சகோதரரான எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், தவெகவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த அஜிதா ஆக்னல், பனையூரில் விஜய்யின் காரை வழிமறித்ததுடன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்து தூத்துக்குடிக்கு வந்த அஜிதா ஆக்னல், விரக்தியில் தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் தவெக வேட்பாளராக விஜய்யின் நண்பர் நடிகர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டின் சகோதரி மகன் என்பதும், மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினராவார். ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடி த.வெ.கவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டாக தூத்துக்குடியில் தவெக சார்பில் பல நிகழ்ச்சிகளை அஜிதா ஆக்னல் நடத்தி வந்த இவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காவிட்டாலும், எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்ற நினைப்பில் இருந்தவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்நிலையில், டிவிகே_சீஃப் (Tvk_Chief) என்ற எக்ஸ் பக்கத்தில், தூத்துக்குடி மக்களின் பேராதரவை பெற்ற அன்பிற்குரிய அஜிதா ஆக்னல், நடிகர் விஜய்- உன் கோமாளித்தனமான அரசியலுக்காக நீ நிச்சயம் வருத்தப்படுவாய். வெல்வோம்! நீதி ஜெய்கும் ! என்ற பதிவும், தூத்துக்குடியின் மலை அளவில் உயர்ந்த நீ, வானுலக அளவில் வளர்ந்த எங்கள் அஜிதா ஆக்னல் அக்காவை மறந்து விட்டாய். இதற்கு பலி தீர்ப்போம் Tvk வை தூத்துக்குடியில் படுதோல்வி அடைய செய்வோம் என டிவிகே_சீஃப் (Tvk_Chief) எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்படுள்ளது.
மேலும், இதைப் போன்று பல்வேறு தொகுதிகளிலும் தவெக-வில் உண்மையான தொண்டர்களின் புரட்சி வெடிக்கும். ஏற்கனவே தூத்துக்குடி , திருத்தணி =0 .தவெக எதிராக வாக்கு அளிப்போம். எந்த ஒரு அடிப்படை அறிவும் இல்லாதவர்களுக்கு சீட் கொடுத்ததற்கு உன் கோமாளித்தனமான அரசியலுக்கு Dot வைக்கப்படும் என டிவிகே_சீஃப் (Tvk_Chief) எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்படுள்ளது.