தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் குருவி சுடுவதைப் போல் 13 பேரை சுட்டுக் கொன்றபோது எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சென்று பார்த்தாரா? 100 நாள் நடந்த அந்தப் போராட்டத்திற்கு எந்த அமைச்சராவது சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக மாநில நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே MGR, N TR உருவாக்கியுள்ளனர். இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை.
பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் MGR, ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். நாடாளுமன்றம் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதாவது அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் குருவி சுடுவதைப் போல் 13 பேரை சுட்டுக் கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. 100 நாள் நடந்த அந்தப் போராட்டத்திற்கு எந்த அமைச்சராவது சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்களா?
ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றது. அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார். 026ல் விஜய் முதலமைச்சராவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து கேள்விக்கு, “நாங்கள் எங்களது தலைவரின் வழிகாட்டுதலில் பயணிக்கிறோம். அதிமுகவில் இருப்பவர்கள் போல இஷ்டத்திற்குப் பேச முடியாது. கூட்டணி குறித்த முடிவைத் தலைவர் விஜய் தான் அறிவிப்பார்” எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தரும் தொழிலை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கும் விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.