இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக நிறைமாத கர்ப்பிணியாக அகதிகள் முகாமிற்கு வந்து 1990 -ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்து, பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை சென்னையில் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர் பாஸ்போர்ட் பெற்றும் தமிழ்நாட்டில் பிறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வசிக்கும் நபரின் பெற்றோர் இந்தியர் இல்லை என்பதால் ஒரே நாளில் நாடற்றவரான மாறியுள்ள தமிழன்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக உயிர் பிழைக்கவும், வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் பல ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளித்து, சட்டப்பூர்வ இந்திய குடிமக்களாக கருதவேண்டும் என்பது நீண்ட காலமாக வைக்கப்பட்டும் வரும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனினும், இது தொடர்பாக தெளிவான வரையறைகள் இல்லாததால், இந்தியாவிலேயே பிறந்தவர்களுக்கு கூட குடியுரிமை கிடைக்க முடியாத நிலையே உள்ளது.
இந்நிலையில், இலங்கை அகதியாக தமிழ்நாட்டுக்கு பெற்றோர் வந்த நிலையில் இந்தியாவில் பிறந்த சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆர். பகிர்சன் என்பவர் தற்போது நாடற்றவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்கு இந்திய குடிமகனுக்கு உள்ள பல ஆவணங்கள் உள்ளன. 1991 -ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட போது பகிர்சனின் பெற்றோர் முகாமிற்கு வந்துள்ளனர். அப்போது நிறைமாத கர்ப்பிணியாக தாய் இருந்த நிலையில், 1990 -ஆம் ஆண்டு பகிர்சன் பிறந்தார்.
இந்தியாவிலேயே பிறந்த பகிர்சன், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை சென்னையில் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இவரிடம் பாஸ்போர்ட்டும் உள்ள நிலையில் 2024 -ஆம் ஆண்டு பகிர்சனுக்கு இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இலங்கையில் இந்த திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பிறகு பாஸ்போர்ட்டில் தனது மனைவியின் பெயரை சேர்க்க பகிர்சன் விண்ணப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பகிர்சனுக்கு மனைவியின் பெயரை சேர்த்து பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பிறகு, பாஸ்போர்ட் பெற்று இருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே பிறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கேயே வசித்தாலும், பெற்றோர் இந்தியர் இல்லை என்பதால், பகிர்சன் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார் என்று அவரை நாடற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமைக்காக பகிர்சன் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இந்திய குடியுரிமையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 1 -ந் தேதி அல்லது அதற்கு பிறகு இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாராவது ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படுவார். பெற்றோர் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தெளிவான சட்டக் கொள்கை இல்லை என்பதால், இலங்கை தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்தாலும், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகவே கருதப்படுகிறார்கள். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1)(பி) நாடற்றவர்களையும், அகதிகளையும் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறுகிறது.

இதுகுறித்து பகிர்சன் கூறுகையில், “நான் என்னை இந்திய குடிமகனாகவே நினைக்கிறேன். இந்திய குடிமகன் இல்லை என்று நான் எங்கும் கூறவில்லை. அனைத்து ஆவணங்களும் முறையாகவே பெற்றுள்ளேன். எனது பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை எங்கும் மறைக்கவில்லை. அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றுகிறேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வருகிறோம். வசிக்கும் இடத்தையும் மறைக்கவில்லை. ஆனால் முதல் முறையாக ‘நாடற்றவன், இந்தியன் இல்லை’ என்று கூறிய போது, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்றார்.
இந்த விஷயம் தெரிந்ததுமே, இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி முகாமில் அவரை அடைக்க இருப்பதாக ஜாமீன் மனு விசாரணையில் அரசு கூறியுள்ளது. ஆனால், இப்படி செய்தால் தனது பெற்றோரை கவனித்துக்கொள்ள முடியாது, பணிக்கு செல்ல முடியாது என்று உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 8 -ந் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ளது.
1987 -ஆம் ஆண்டு ஜூலை 1-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் எந்தவித கூடுதல் நிபந்தனைகள் இன்றி குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பகிர்சன் நாடற்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். பகிர்சன் தற்போது குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 6-ன் கீழ் இயல்புபடுத்துதல் அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.