கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம பெண் உதவியாளர் ஜாகிதா பேகம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் இப்பணியில் ஈடுபட்டிருந்த கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூத் நிலை அதிகாரி அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கொற்கை பகுதியைச் சேர்ந்த சித்ராவிற்கு நாச்சியார்கோயில் பகுதியிலு ள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு SIR பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், SIR பணியை விரைந்து முடிக்கும் படி அழுத்தம் கொடுத்து வா, போ என சித்ராவை ஆணையர் ஒருமையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தூக்க மாத்திரைகளை முழுங்கி விட்டு பணிக்குச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, சக ஊழியர்களிடம் நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்க மாத்திரைகள் முழுங்கி விட்டேன் எனக் கூறியுள்ளார்.
அதிச்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆவேசமடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஆணையரைக் கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தங்கள் கிராமத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வரும் ஜாகிதா பேகம் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், ஜாகிதா பேகம் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் தற்கொலைக்கான காரணமாக என்ன என்பது தெரியவில்லை.
அதேவேளையில் குடும்பத்தினர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் ஜாகிதா பேகம் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும், அதனால் அவர் தற்கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுபற்றி காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி வாக்காளர் பட்டியில் தீவிர திருத்தம் தொடங்கி இந்த பணி அடுத்த மாதம் 4 -ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியில் பெயர் இருப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் வாங்கி அதனை பூர்த்தியிட்டு திரும்ப பெறும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விண்ணப்பத்தை முறைப்படி நிரப்பி கொடுத்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும். இல்லாவிட்டால் ஓட்டுரிமை பறிக்கப்படும். இதனால் தான் எதிர்க்கட்சிகள் இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வாக்காளர்களை தேடி தேடி விண்ணப்ப படிவம் வழங்குவது ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கள உதவியாளர்கள் என ஏறத்தாழ 42 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம பெண் உதவியாளர் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.