உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில்சர் வேஷ் சிங் என்ற BLO அதிகாரி ஒருவர் வீடியோ மற்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இந்தப் பணிகளால் கடும் அழுத்தம் ஏற்படுவதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையே வேலைப் பளு காரணமாக BLO அதிகாரி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சர்வேஷ் சிங் என்ற BLO அதிகாரி “சார்” பணிகளின் அழுத்தம் காரணமாகத் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சர்வேஷ் சிங் அங்குள்ள ஒரு பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த அக்டோபர் 7-ந் தேதி அவருக்கு முதல் முறையாக வாக்குச்சாவடி நிலை அதிகாரி பணி ஒதுக்கப்பட்டது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான படிவங்களைப் பூர்த்தி செய்யவும், விவரங்களைப் பதிவேற்றவும் உதவும் இந்த BLO அதிகாரிகள் உதவுவார்கள். அந்த வேலைப் பளு காரணமாகவே அவர் இந்த மோசமான முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் சர்வேஷ் சிங் பதிவு செய்த வீடியோவில், கதறி அழுத சர்வேஷ் சிங், கொடுத்த வேலையைச் சரியான நேரத்திற்குள் செய்து முடிக்கவில்லை என்று அழுகிறார். தனது தாயிடம், சகோதரியிடம் மன்னிப்பு கேட்ட சர்வேஷ், தனது மகள்களைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார். இது தொடர்பாக அந்த வீடியோவில் மேலும், “அம்மா, என் மகளை பார்த்துக் கொள்ளுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள்.. என்னால் வேலையை முடிக்க முடியவில்லை. இதனால் நான் ஒரு முடிவை எடுத்துவிட்டேன். எனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. இதற்காக எனது குடும்பத்தினரை எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.
நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு நான்கு மகள்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் சின்ன வயது.. அவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் இந்த உலகை விட்டு வெகுதூரம் செல்கிறேன். இதற்காக என்னை மன்னிக்கவும்.. நான் இல்லாத போது என் குழந்தைகளைத் தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கண் கலங்கியவாறு கூறுகிறார். நேற்றைய தினம் சர்வேஷ் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது மனைவி பப்லி தேவி, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்து இரண்டு பக்கத் தற்கொலை கடிதத்தையும் மீட்டனர்.
அந்தக் கடிதத்தில், “நான் இரவும் பகலும் உழைத்தேன்.. ஆனால், சார் பணிகளின் டார்கெட்டை அடைய முடியவில்லை. பதற்றம் காரணமாக இரவில் தூக்கம் இல்லை. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் இருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. என்னை மன்னியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.