இன்றைய விஞ்ஞான உலகில் உள்ளங்கைக்குள் உலகம் என்ற வார்த்தையை உண்மையாக்கும் வகையில் அலைபேசி இருந்தால் போதும், உலகின் எந்த மூலையில் இருப்பவர்களுடன் பேசலாம் மற்றும் என்ன தகவல் வேண்டுமானாலும் பரிமாற்றி கொள்ளலாம் என்ற அளவின்றி டிஜிட்டல் மாறி வருகின்றது. அலைபேசிகளை பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் வெறும் தொலைபேசி அழைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு அலைபேசிகளில் வீடியோ பார்ப்பது, வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது என மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக அலைபேசிகள் மாறிவிட்டன.
டிவி பார்க்கும் பழக்கம் கூட பலருக்கும் குறைந்துவிட்டது என சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. புதிதாக திரைக்கும் வரும் திரைப்படங்கள் முதல் கிரிக்கெட் உள்ளிட்ட லைவ் டெலிகாஸ்ட்கள் வரை அலைபேசிகளிலே தற்போது பார்த்துவிட முடிகிறது. ஆனால் இவை அனைத்திற்கு உயிர்மூச்சாக இருப்பது இணையதள வசதிதான். இதனால், இணையதள வசதி அதிகம் இல்லாத இடங்களுக்கு செல்லும் போது, அலைபேசிகளில் வீடியோக்கள், பொழுதுபோக்கு சேனல்கள் உள்ளிட்டவற்றை பார்க்க முடியாத சூழல் இருக்கிறது. அப்போது எல்லாம், இணையதள வசதியே இல்லாமல் நேரடியாக இதுபோன்ற லைவ் ஸ்ட்ரீமிங்கில் சேனல்கள் ஓடினால் என நினைத்து பார்த்து இருப்பார்கள். ஆனால் இது உண்மையிலேயே இப்படியான ஒரு நிகழ்வு நடக்கப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இணையதள வசதி இல்லாத பட்டன் போன்களில்கூட லைவ் டிவி வீடியோக்களை பார்க்கும் வசதி விரைவில் வர உள்ளதாம். (D2M) என்ற தொழில் நுட்பம் மூலம் இந்த வசதி சாத்தியம் ஆகும் என்கிறார்கள் வல்லுனர்கள். செயற்கைகோள் மற்றும் பிராட்காஸ்ட் டவர்களின் மூலமாக லைவ் கண்டெண்ட்கள் மொபைலில் ஓடும். எப்.எம் சேனல்கள் எப்படி நேரலையாக கேட்கிறதோ அதேபோல, இணையதள வசதியின்றி வீடியோக்களும் பார்க்க முடியும். ரூ.1,000 முதல் 2 ஆயிரம் விலையில் விற்க கூடிய செல்போன்களில் கூட இவற்றை பார்க்க முடியுமாம். இணையதள வசதி அதிகம் இருக்காத குக்கிராமங்களில் உள்ளவர்கள் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், லைவ் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். அலைபேசி நெட்வொர்க் வசதி போன்று இல்லாமல் எவ்வளவு பேர் பார்த்தாலும் இது முடங்காது.
பிரபல அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களான லாவா மற்றும் ஹெச்.எம்.டி ஆகியவை மேற்கூறிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ரூ.2 ஆயிரம் முதல் 2,500 ரூபாய் வரம்புக்குள் புதிய சாதனங்களை தயாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான சிப்செட்ஸ்களை டாடா குழுமத்தை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. துவக்கத்தில் மத்திய அரசின் பிரசார் பாரதி (தூர்தர்ஷன்) சேனல்கள் இந்த கருவிகளில் லைவ் ஆக பார்க்க முடியும் வகையில் கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது. அதேபோல, D2M திறனுடன் ஸ்மார்ட்போன்களும் தயாரிக்க திட்டமிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த வசதி மட்டும் செயல்பாட்டுக்கு வந்தால், ஸ்மார்ட்போன்களில் இணையதள வசதி இல்லாமலே லைவ் சேனல்களை பார்க்க முடியும்.
எப் எம் ரேடியோவில் எப்படி சிக்னல்கள் ரிசிவராக மாற்றப்படுகிறதோ அதேமாதிரியான தொழில் நுட்பத்துடன் இது செயல்படும். எளிதாக சொல்வது என்றால் டிடிஎச் சேவை இயங்குவது போலத்தான். இதற்கான சோதனைகள் டெல்லி மற்றும் பெங்களூரில் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அடுத்த 9 மாதங்களில் மேலும் சில சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 24 க்கும் மேற்பட்ட நகரங்களில் சோதனை மேற்கொண்ட பிறகு இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் என்றும் சொல்லப்படும் நிலையில் இணையசேவைக்கான கட்டணம் மூலம் பெருமளவு வருவாய் பார்க்கும் டெலிகாம் நிறுவனங்கள் இதனால் பெரும் பாதிப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.