நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த சிவியாம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி. கடந்த மாதம் 29-ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி காவல்துறையினர் அந்த மாணவியை நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் மீட்டனர். இதுகுறித்து மாணவியிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புங்கன்பட்டியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான தமிழரசன், அவரது நண்பரான பிரதாப் ஆகியோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாணவியின் ஊருக்கு சென்ட்ரிங் வேலைக்கு வந்துள்ளனர். அப்போது தமிழரசனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழரசன் அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைக்க அவர், நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி, சேலம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தமிழரசன், மாணவியை மேச்சேரி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நண்பர் பிரதாப்புடன் சேர்ந்து, கூட்டு பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசன் மற்றும் பிரதாப்பை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.