கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியில், அர்ஷித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக் காதலன் அஷ்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை சாப்பிடும்போது உணவு தொண்டையில் சிக்கி, மயங்கி விட்டதாக சொல்லி குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு அகிலா சென்றுள்ளார். குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது. மருத்துவ அறிக்கையின்படி, குழந்தையின் மரணம் தற்செயலானது அல்ல என்பதும், அது திட்டமிட்ட படுகொலை என்பதும் உறுதியானது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் மற்றும் தழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குழந்தையின் இரண்டு கைகளும் ஏற்கனவே உடைந்து, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
மேலும் சிகரெட்டால் சுடப்பட்ட தீக்காயங்களும், பிறப்புறுப்பில் கடுமையான காயங்களும் இருந்ததும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தன. குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், குழந்தையின் தலையை சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலால் ஏற்பட்ட மூளை மற்றும் உட்புற உறுப்புகளின் ரத்தப்போக்கு காரணமாகவே குழந்தை இறந்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
அகிலாவின் முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அஷ்கருடன் இணைந்து அகிலா கறிக்குழி என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அஷ்கருக்கும் ஏற்கனவே திருமணமாகி அமீனா என்ற முதல் மனைவி உள்ளார். அவரை வரதட்சணை கேட்டு தாக்கியதில், அவர் கடந்த ஓராண்டாக கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது காதலர் அஷ்கரால், குழந்தை சித்திரவதை செய்யப்படுவது தாய் அகிலாவுக்குத் தெரிந்தும், அவர் அதைத் தடுக்காமலும், காவல்துறையினருக்குத் தெரிவிக்காமலும் இருந்துள்ளார்.
மேலும் குற்றத்தை மறைக்க வீட்டில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவி, குழந்தையின் துணிகளையும் அஷ்கருடன் சேர்ந்து அகிலா எரித்து இருக்கிறார். குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் அழிக்க முயன்றுள்ளனர். ஒரு குழந்தையின் உயிர் இவ்வாறு பறிபோன சம்பவம் கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.