பிரியாணி சாப்பிட்டு சிறிது நேரத்தில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை பைதோனி பகுதியை சேர்ந்த அப்துல்லா. இவரது மனைவி நஸ் ரீன். இவர்களுக்கு ஆயிஷா மற்றும் ஷைனப் என்ற மகள்கள் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அப்துல்லா வீட்டுக்கு உறவினர்கள் வந்து இருந்தனர். எனவே இரவு 10.30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினர் உறவினர்களுடன் அசைவ விருந்து சாப்பிட்டனர். உறவினர்கள் சென்றபிறகு அப்துல்லா குடும்பத்தினர் நள்ளிரவு 1 மணி அளவில் தர்பூசணி பழம் சாப்பிட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அப்துல்லா குடும்பத்தினருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. தொடர்ந்து உடல் நிலை மோசமானதால், ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 4 பேரும் பலியாகினர். தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் மரணத்துக்கான காரணம் தெரியவரும். சம்பவம் குறித்து ஜே.ஜே. மார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி சாப்பிட்டால் மரணம் வரை ஏற்படுமா? இந்த சம்பவத்திற்கு பிறகு பொதுமக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது தர்பூசணியை எப்போது எல்லாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை பார்க்கலாம். பிரியாணியையும் தர்ப்பூசணியையும் அடுத்தடுத்து சாப்பிடுவதாலோ அல்லது சிறிது இடைவெளி விட்டு சாப்பிடுவதாலோ உயிரிழப்பு வரை ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த இரண்டும் இருவேறு உணவுகள், இரண்டுமே செரிமானம் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வேறு வேறு ஆகும்.
எனினும், இந்த உணவுகளை ஒன்றாக சாப்பிட்டதால் மரணம் ஏற்படுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். மும்பை சம்பவத்தை பொறுத்தவரை ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. உணவு அல்லது தர்பூசணி நீண்ட நேரம் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது கெட்டுப்போனாலோ, அவற்றில் அபாயகரமான பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம். ஸ்டேஃபிளோகாக்கஸ், சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலி போன்ற பாக்டீரியாக்கள் உணவு வழியாக உடலுக்குள் நுழைந்து வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன.
சில சமயங்களில், இந்த நிலை செப்சிஸ் எனப்படும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கூட வழிவகுக்கும் ஃபுட் பாய்சன் ஏற்பட்ட பிறகு அறிகுறிகள் வெளிப்படவும், அது தீவிரம் ஆகவும் வழக்காக கொஞ்சம் டைம் எடுக்கும். ஒருவர் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருப்பவராக இருந்தால், தொற்றை எதிர்த்து உடல் போராட முயற்சிக்கும். எனினும், தொடர்ச்சியாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலில் நீர்சத்து குறைந்து எலக்ட்ரோலைட்ஸ் குறையும். இதனால் ரத்த அழுத்தம் வேகமாக குறைந்து அதிர்ச்சி நிலை ஏற்படும்.
இந்த சூழ்நிலை சில நேரங்களில் ஆபத்தானது. அசைவ உணவு செரிமானம் ஆவதற்கும் நீர்சத்து நிறைந்த பழங்கள் செரிமானம் ஆவதற்கும் எடுத்துக்கொள்ளும் நேரம் வெவ்வேறானவை. தர்ப்பூசணி உடனடியாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு நேரம் பிடிக்கும். இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால், உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக அமையாது” என்பது நிதர்சனமான உண்மை.