2024 -ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என ஒப்பந்தம் போட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி எங்களை பற்றி வரம்பு மீறி பேசியுள்ளார். 2024 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கூட்டணி ஒப்பந்தத்தில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதாக கூறி எங்களை பழனிசாமி ஏமாற்றியவர். இதுவரை நான் எந்த இடத்திலும் ஆதாரத்தை காட்டியதில்லை.
கண்ணியம், அரசியல் நாகரீகம் கருதி ஒப்பந்தத்தை காட்டாமல் இருந்த நிலையில், ஆதாரத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு எங்களை தள்ளிவிட்டார். இப்போது உண்ணாமலையம்மன் முன்பு காட்டுகிறேன். இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் எந்த ஆண்டு என இருக்கிறது என்பதையும் பாருங்கள். ஒருபுறத்தில் அவரும் மறுபுறத்தில் நானும் கையெழுத்திட்டிருக்கிறோம். 5 லோக்சபா தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அப்படி எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்கிறார்.
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் எந்த ஆண்டு என்பதை போட்டுக் கொடுங்கள் என நான் கேட்ட போது, அவர், “இல்லைமா, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே வருஷத்தை போட்டு கொடுப்பதில்லை. என் வார்த்தையை நம்புங்கள். இதெல்லாம் வெறும் பேப்பர்தான்மா. நான் சொல்கிறேன் 2025 -ல் ராஜ்யசபா சீட் உங்களுக்குத்தான்” என்றார். 2025 மாநிலங்களவைத் தேர்தல் வந்த போது நாங்கள் கேட்டதற்கு மறுத்துவிட்டார். அப்படி ஒரு ஒப்பந்தமே போடவில்லை என தெரிவித்துவிட்டார் என பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.