கோயம்புத்தூர் மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய செவிலியர் பணியிடை நீக்கம் செய்து கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி வி.என்.ஆர்.நகரில் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம் செயல்படுகிறது. இங்கு கனிதா என்பவர் செவிலியராக வேலை செய்து வந்தார். கனிதா சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நகர்ப்புற சுகாதார நிலையத்தை திமுக பிரமுகர் ஒருவர் வீடாக மாற்றி பயன்படுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் அதிமுக ‘ஐ.டி. விங்’ சேர்ந்த ஹரிபாபு என்பவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட விளக்கத்தில், “கோயம்புத்தூர் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிட வசதி இல்லாததால் வடவள்ளி பெரியார் நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு அறை மட்டுமே கொண்ட கட்டிடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 14.02.2026 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பாலுசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மே 2025 முதல் மேற்கண்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் கனிதா என்ற நகர்புற சுகாதார செவிலியர் குடியமர்த்தம் செய்யப்பட்டு திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனைகள் புதன் கிழமைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் செலுத்துதல் மற்றும் சிறு உபாதைகளுக்கான சிகிச்சைகள் தினம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமதி கனிதாவின் கணவர் ஷ்யாம் சுந்தர் பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டது.

தற்போது புகார் பெறப்பட்ட உள்ள கட்டிடம் தேசிய நகர்புற வளர்ச்சி நிதியின் கீழ் முதலில் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. கட்டிடம் நான்கு அறைகள் மட்டுமே கொண்ட சிறிய கட்டிடமாக உள்ள நிலையில் கட்டிடம் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. அந்த துணை சுகாதார நிலையம் இன்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்தபோது சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் திருமதி கனிதா மற்றும் அவரது கணவர் திருமதி. ஷ்யாம் சுந்தர் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருந்தனர். மேலும், அந்த துணை சுகாதார பகுதில் மேற்படி பொருட்களை பயன்டுத்தியதற்காக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலர் அவர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற நான்கு அறைகளில் இரண்டு அறைகள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்குமாறும் இரண்டு அறைகளை மட்டும் தங்குவதற்கும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயரை துணை சுகாதார நிலையம் என மாற்றி எழுதவும், சிகிச்சை அறைகளுக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடையில் தடுப்பு சுவர் எழுப்பவும் குடியிருப்பு பகுதிக்கு தனி வாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.”
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இது தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பேரில் நர்சு கனிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் மருத்துவர் பாலுசாமி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந்த நகர்ப்புற சுகாதார நிலையம், தற்போது துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு அதற்கான நோட்டீசும் ஒட்டப்பட்டு இருக்கிறது.