சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் செலுத்தி வருகின்றனர். இதனையோட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்தார். “தமிழகம் முழுவதும் தவெக சார்பில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தவெக தலைமை கழகத்தின் ஆணைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. குறிப்பாக ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எதிர்கால தமிழகத்தை ஆளப்போகின்ற தலைவர் விஜய் சுற்று பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மட்டுமன்றி எதிர்கால தமிழகத்தின் ஆளும் சக்தியாக தமிழக மக்களால் பார்க்கப்படுகிறார் விஜய்” என்றார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள், “ஒருவர் மீது இருக்கும் கோபத்தில் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா விமர்சித்துள்ளாரே” எனக் கேள்வி ஏழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த செங்கோட்டையன், அடுத்தடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் உடனே எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.