மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காக தொடங்கப்பட்ட “லட்கி பஹின் யோஜனா” திட்டத்தில் 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2024 இல் மகாராஷ்டிர அரசாங்கத்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்காக “லட்கி பஹின் யோஜனா” தொடங்கப்பட்ட ஒரு முக்கிய நலத் திட்டமாகும். இதில் 21 முதல் 65 வயது வரையிலான பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதையும், அவர்களின் மறுவாழ்வு, பொருளாதார மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விண்ணப்பதாரரின் எந்த குடும்ப உறுப்பினரும் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது, விண்ணப்பதாரரின் குடும்பத்தின் ஒருங்கிணைந்த ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மகாராஷ்டிராவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தகுதியுள்ள பெண்கள் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் மாதத்திற்கு ரூ.1,500 உதவித் தொகை வழங்கபட்டது.
இந்நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நடத்திய தணிக்கையில், 14,298 ஆண்கள் போலியாகப் பதிவு செய்து, 21.44 கோடி ரூபாய் நிதி பலன்களைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.