மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த வாரம் வழக்கமான நடைப்பயிற்சியில் போது தலை சுற்றல் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை மேற்கொண்டு வந்தார்.
மருத்துவமனையில் இருந்தபடி அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டும் மேலும் கலகத்தினரையும் அழைத்து ஓரணியில் தமிழ்நாடு குறித்த விவரங்களையும் கேட்டறிந்தும் அலுவல் பணிகளையும் மேற்கொண்டார்.

இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மு.க. ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையில், “அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் அவர்கள் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்”என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாலை மு.க. ஸ்டாலின் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய முதலமைச்சரை மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள், கழகத்தினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து முக. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நலம்பெற்று வீடு திரும்பினேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் – மக்கள் பிரதிநிதிகள் – நீதியரசர்கள் – அரசு அதிகாரிகள் – திரைக் கலைஞர்கள் – என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்! என முக. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.