பிராமணர்கள் பூஜை செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது! பிடிபட்டால், அவர்களை அழைத்த நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள்’ என பிகார் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூத்த கதாகலாட்சேபகர் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். இதனிடையே, முகுட்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைதாகியுள்ளனர். பிராமணர் அல்லாத முகுட்மணி யாதவ் கதாகலாட்சேபம் செய்யக் கூடாது என்ற புகார் அந்த தாக்குதலில் காரணமாக கூறப்படுகிறது. இதன் மீது எதிர்க்கட்சியான சமாஜ் வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், யாதவர்கள் கதாகலாட்சேபம் செய்வதன் மீது ஆதரவாகவும், எதிராகவும் ஆன்மிக வாதிகளும் கருத்துகளை கூறியிருந்தனர். மேலும், முகுட்மணி மீது பாலியல் மற்றும் தாம் பிராமணர் எனப் பொய் கூறிய மோசடி வழக்குகளும் பதிவாகி இருந்ததால் இவ்விவகாரம் தலைகீழாக மாறியது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமூக அரசியல் பிரச்சனையாக உருவெடுத்த இச்சம்பவத்தின் தாக்கம், பிகாரிலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில எட்டாவா சம்பவத்திற்கு எதிர்க்கும் வகையில் திகுலியா கிராம வாசிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தின் நுழைவுப் பகுதியில் இந்த அறிவிப்பு பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமத்தில் பல மின் கம்பங்களிலும் பிராமண பண்டிதர், பூசாரிகளுக்கு எதிரான இதே வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதை விட ஒரு படி அதிகமாக, சில கிராம வாசிகள் தங்கள் வீடுகளுக்கு முன்புறத்திலும் இதுபோன்ற அறிவிப்புகளை வைத்துள்ளனர். திகுலியா கிராமத்தில் பெரும்பாலான மக்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். இந்த கிராமத்தில் பிராமண மக்கள் வசிக்கும் பல கிராமங்கள் அருகிலேயே உள்ள நிலையில் இந்த பிராமண மக்கள் வசிக்கவில்லை. ஆனாலும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.